சட்டசபை தேர்தல் எதிரொலி; தி.மு.க., - அ.தி.மு.க., பரிசு பொருட்கள் வழங்க போட்டா போட்டி

நமது நிருபர்

சட்டசபை தேர்தல் தேதி இன்னும் ஒரு வாரத்திற்குள் அறிவிக்க உள்ள நிலையில், வாக்காளர்களை கவர தி.மு.க., - அ.தி.மு.க.,வினர், தங்கள் தலைவர்களின் பிறந்த நாள் என்ற பெயரில் பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு பரிசு பொருட்களை போட்டி போட்டு வழங்கி வருகின்றனர்.

தமிழகத்தில், 2026ம் ஆண்டிற்கான சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் கடைசி அல்லது மே மாதம் நடக்கவுள்ளது. இதற்கான தேர்தல் தேதி இன்னும் ஒரு வாரத்திற்குள் எந்த நேரத்திலும் தேர்தல் ஆணையர் அறிவிக்கலாம்.

இந்நிலையில், திருத்தணி சட்டசபை தொகுதியில், தி.மு.க.,- அ.தி.மு.க.,வினர் போட்டி போட்டு வாக்காளர்களுக்கு பரிசுகள், வேட்டி, சேலை, விளையாட்டு கருவிகள் மற்றும் ஆட்டோ போன்றவற்றை மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் என்று தி.மு.க.,வினரும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் என, அ.தி.மு.க., வினரும், வாக்காளர்களுக்கு தினமும் பரிசுகள் வழங்கி குஷிப்படுத்தி வருகின்றனர்.

உதாரணமாக, தி.மு.க.,வினர், எம்.எல்.ஏ., சந்திரன் தலைமையிலும், அ.தி.மு.க.,வினர் முன்னாள் எம்.பி., திருத்தணி அரி, முன்னாள் அரசு கொறடா நரசிம்மன் ஆகியோர் தலைமையில் கட்சி நிர்வாகிகள், சட்டசபை தொகுதி முழுவதும் பல்வேறு நலத்திட்ட உதவிகள், பிரியாணி விருந்து வழங்கி வருகின்றனர்.

தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் திருத்தணி பூபதி ஆகியோர் தலைமையில், திருத்தணி நகராட்சி, பள்ளிப்பட்டு மற்றும் பொதட்டூர்பேட்டை பேரூராட்சி ஆகிய இடங்களில் இளைஞர்களுக்கு விளையாட்டு பொருட்கள் வழங்கி வருகின்றனர்.

அதேபோல், அ.தி.மு.க.,வினர், பெண்களுக்கு சேலை, பரிசு பொருட்கள் போன்றவற்றை வழங்கி வருகின்றனர். மேலும், மக்களுக்கு பிரியாணி விருந்தும் வழங்கி வருகின்றனர். இரு கட்சி சார்பிலும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதால், மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Source link