சட்டசபை தேர்தல் தேதி 15 அல்லது 16ல் அறிவிப்பு?

சென்னை: தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் தேதி, வரும் 15 அல்லது 16ம் தேதி அறிவிக்கப்பட இருப்பதாக தெரிகிறது.

தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய, ஐந்து மாநிலங்களுக்கு, வரும் ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளில் தேர்தல் கமிஷன் ஈடுபட்டுள்ளது.

கடந்த பிப்ரவரி 26, 27ம் தேதிகளில், தமிழகம், புதுச்சேரி வந்த தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார், கமிஷனர்கள் சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி, தலைமைச் செயலர், டி.ஜி.பி., உள்ளிட்ட அரசுஅதிகாரிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

அசாமிலும் தனது ஆலோசனையை தேர்தல் கமிஷன் முடித்துள்ளது. தலைமை தேர்தல் கமிஷனர்களின் கேரள பயணம் நேற்று முடிந்தது. நாளை முதல் இரு நாட்கள், மேற்கு வங்கத்தில் பயணம் மேற்கொள்கின்றனர்.

அதன்பின், டில்லியில் வரும் 11ம் தேதி, சமூக ஊடக நிறுவனங்களுடன் தேர்தல் கமிஷன் ஆலோசனை நடத்துகிறது. அதன்பின், ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை இறுதி செய்யப்பட்டு, வரும் 15 அல்லது 16ம் தேதி அறிவிக்க, தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதையெல்லாம் கருத்தில் வைத்துத்தான், வரும் 13ம் தேதி, அசாமில் பிரதமர் மோடி பங்கேற்கும் அரசு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ஐந்து மாநில சட்டசபை தேர்தலுடன், பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள லோக்சபா, சட்டசபை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. மேற்கு வங்கத்தில், ஐந்து முதல் ஏழு கட்டமாக தேர்தல் நடத்தப்படும். தமிழகம் உள்ளிட்ட மற்ற நான்கு மாநிலங்களில், ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

Source link