சட்டசபை தேர்தல் புறக்கணிப்பு: இருளர் குடும்பங்கள் அறிவிப்பு

வேலுார்: வேலுாரில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கி ஐந்தாண்டுகளாகியும், அடிப்படை வசதிகளை, மாவட்ட நிர்வாகம் செய்து தராததால், 47 இருளர் குடும்பத்தினர், தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

வேலுார் மாவட்டம், வண்திரதாங்கல் ஊராட்சிக்குட்பட்ட சொர்க்கால்பேட்டை மலை அடிவாரத்தில், 47 இருளர் குடும்பத்தினர், குடிசை வீடுகளில் வசிக்கின்றனர்.

இவர்களில், 17 குடும்பத்தினருக்கு, 2021ல் அரசு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கியது. மீதமுள்ளோர் இணைய வழியில், பட்டா கோரி விண்ணப்பித்துள்ளனர்.

கடந்த, 2021ல் பட்டா வழங்கிய பின், நான்கு ஆண்டுகளாக சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதையும் அரசு செய்து தரவில்லை.

இதனால், இருளர் சமூகத்தினர், அப்பகுதியில் குடியேற மறுப்பு தெரிவித்தனர்.

மாவட்ட நிர்வாகம் சார்பில், 2024 அக்டோபரில், ‘ஒரு மாத இடைவெளியில் சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்’ என, உறுதி அளிக்கப்பட்டது.

அதை நம்பி, 47 இ ருளர் குடும்பத்தினரு ம் மலை அடிவாரத்தில் குடியேறினர்.

ஓராண்டாகியும், பழங்குடியினர் வீடு கட்டும் திட்டத்தில் வீடு கட்டுவது, சாலை அமைப்பது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர, அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கூறுகையில், ‘யானை நடமாட்டம் உள்ள மலைப்பகுதியில், வீடு, மின் சாரம், சாலை, குடிநீர் என, எந்த வசதியும் இல்லாமல், ஓராண்டாக வசிக்கிறோம். கலெக்டர் அலுவலகத்தில், பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. சட்டசபை தேர்தலை புறக்கணிக்க உள்ளோம்’ என் றனர்.

Source link