சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்தது த.வெ.க. : வெளியான அதிகாரப்பூர்வ தகவல்!

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் ஏப்ரல் 9ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்பட்டு மே 4ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையொட்டி தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்ய இன்று (23.03.2026) கடைசி நாள் ஆகும். இதனால் அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களைத் தேர்வு செய்து வேட்புமனுவைத் தாக்கல் செய்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் தான் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான தவெக வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் விஜய் நேற்று (22.03.2026) வெளியிட்டிருந்தார். அதில், “சாமிநாதன் லாஸ்பேட்டை தொகுதி, அசனா காரைக்கால் தெற்கு தொகுதி, பெரியசாமி நெட்டப்பாக்கம் (தனி) தொகுதி, சாய் சரவணன் குமார் திருபுவனை (தனி) தொகுதி, பிரகாஷ் குமார் முத்தியால்பேட்டை தொகுதி, தனவேலு பாகூர் தொகுதி, சந்திரன் ராஜ் பவன் தொகுதி என மொத்தம் உள்ள 30  தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியலை விஜய் அறிவித்திருந்தார்.

இத்தகைய சூழலில் தான் புதுச்சேரியில் தமிழக வெற்றிக் கழகம் – நேயம் மக்கள் கழகத்துடன் கூட்டணி அமைத்துள்ளது. அதோடு நேயம் மக்கள் கழகத்திற்கு உருளையான்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் புதுச்சேரி மாநிலச் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி உடன்படிக்கை குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் சார்பில் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “புதுச்சேரி மாநிலத்தில் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் 30 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், புதுச்சேரி மாநில வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, நேயம் மக்கள் கழகம் நிறுவனத் தலைவர்  நேரு என்கிற குப்புசாமி எம்.எல்.ஏ., தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்து பணியாற்ற விருப்பம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள 30 சட்டமன்றத் தொகுதிகளில் உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகள், கூட்டணியில் சேர்ந்துள்ள நேயம் மக்கள் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை த.வெ.க. தலைவர் விஜய்யின் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Source link