மும்பை,:ஹெச்.டி.எப்.சி., வங்கி தலைவர் பதவியை அதானு சக்ரவர்த்தி கடந்த வாரம் ராஜினாமா செய்த நிலையில், ராஜினாமா கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காரணங்கள் குறித்து சுதந்திரமான முறையில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, ‘டிரை லீகல்,’ ‘வாடியா காந்தி & கோ’ ஆகிய இரு சட்ட நிறுவனங்களை அவ்வங்கி நிர்வாகம் நியமித்து உள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல ஆண்டுகளாக இருந்து வரும் எங்களின் உயரிய நிர்வாக தரத்தை உறுதி செய்யும் வகையில், இந்த பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்படுகிறது. உண்மைகளின் அடிப்படையில் மட்டுமே இந்த ஆய்வு அமையும்” என்று கூறப்பட்டுள்ளது.
“வங்கியின் சில நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள், என் தனிப்பட்ட பண்புகள் மற்றும் நியாய உணர்வுகளுடன் ஒத்துப்போகவில்லை” என அதானு குறிப்பிட்டிருந்தார்.
எனினும், அந்த குறிப்பிட்ட நடைமு றைகள் என்ன என்பது குறித்து அவர் தெளிவான விவரங்களை அளிக்கவில்லை. இதையடுத்து, சட்ட நிறுவனங்களை வங்கி நிர்வாகம் அணுகி உள்ளது.
