சட்ட விரோதமாக கருமுட்டை தானம்; ஏழை பெண்களை குறிவைத்து மோசடி: பல கோடி ரூபாய் சுருட்டிய மூன்று பேர் கைது

தானே: மஹாராஷ்டிராவில், ஏழை பெண்களை குறிவைத்து சட்ட விரோதமாக அவர்களின் கருமுட்டைகளை தானமாக பெற்று, பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்ட மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர்.

சமீபகாலமாக, குழந்தை இல்லாத தம்பதி அதிகரித்து வரும் சூழலில், பல்வேறு இடங்களில் ஐ.வி.எப்., எனப்படும் செயற்கை கருத்தரித்தல் மையங்களும் அதிகரித்துள்ளன. இதில், கருமுட்டை உற்பத்தி ஆகாத பெண்களுக்கு, மற்றொரு பெண்ணின் சம்மதத்துடன் அவரது கருமுட்டைகளை தானமாக பெற சட்டத்தில் வழிவகை உள்ளது. ஆனால், இதை பலர் தவறாக பயன்படுத்தி பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

மஹாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பத்லாப்பூர் கிழக்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சட்டவிரோதமாக கருமுட்டை தானம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதன்படி, அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஒரு பெண், மற்றொரு நபருக்கு சட்டவிரோதமாக கரு முட்டைகளை தானமாக வழங்கியதை கண்டறிந்தனர்.

அவர்களை கைது செய்து விசாரணை நடத்தியதில், ஏழை பெண்களை குறிவைத்து ஒரு சுழற்சிக்கு, 30,000 ரூபாய் வரை வழங்கியது தெரியவந்தது. இதற்காக, அப்பெண்களுக்கு ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்பட்டு, அங்குள்ள ஸ்கேன் மையங்களில் அவ்வப்போது பரிசோதனை செய்யப்பட்டது. கருமுட்டைகள் நன்கு வளர்ச்சியடைந்தவுடன், செயற்கை கருத்தரித்தல் மையத்திற்கு அழைத்து செல்லப்பட்டு, அவர்களின் கருமுட்டைகள் எடுக்கப்பட்டு வந்தன. இதுபோல், ஒரே பெண்ணிடம் பலமுறை கருமுட்டைகளை பெற்றுள்ளனர். இதுவரை 20க்கும் மேற்பட்ட பெண்களின் கருமுட்டைகளை பெற்றுள்ள அக்கும்பல், பல கோடி ரூபாய் சம்பதித்துள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக சுலக்ஷனா கடேகர், 44, அஸ்வினி சபுக்ஸ்வர், 29, மஞ்சுஷா வான்கடே, 46, ஆகிய மூன்று பெண்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மொபைல் போன்கள், போலி ஆவணங்கள், நிதி பரிவர்த்தனைகளுக்கான சான்றுகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.

Source link