சென்னை: சட்ட விரோத பணப் பரிமாற்ற வழக்கில், திருநெல்வேலி மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலர் சுதாவின் கணவரும், அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழக தலைவருமான மூர்த்தி, அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாவட்டம், சி.என்.கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி, 45. இவரது மனைவி சுதா; தி.மு.க.,வைச் சேர்ந்தவர். இவர், திருநெல்வேலி மாநகராட்சி கவுன்சிலராகவும், வரிவிதிப்பு மற்றும் பணிக் குழு தலைவராகவும் உள்ளார்.
இவரது கணவர் மூர்த்தி. அகில இந்திய பசும்பொன் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக உள்ளார்.
சில தினங்களுக்கு முன், சென்னையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க., நிர்வாகிகளை சந்தித்து, சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.
இந்நிலையில், மூர்த்தி, அவரது கூட்டாளி பாலசுப்பிரமணியம் ஆகியோர், வங்கி கடன் வாங்கி தருவதாக, 25 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அமலாக்கத் துறை அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.
இருவரும் சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக விசாரித்த அமலாக்கத் துறை அதிகாரிகள், நேற்று மூர்த்தியை கைது செய்தனர்.
