சண்டிகர்: பஞ்சாபை ஆம் ஆத்மி ஊழல், போதைப்பொருள் மற்றும் குற்றங்களில் மூழ்கடித்துவிட்டது என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் உள்ள கில்லி சாஹ்லான் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: 2027ல் பாஜ ஆட்சி அமைக்க போராடும். பாஜவின் இரட்டை இன்ஜின் ஆட்சியில் மட்டுமே பஞ்சாபின் பிரச்னைகளைத் தீர்க்க முடியும். பஞ்சாபை ஆம் ஆத்மி ஊழல், போதைப்பொருள் மற்றும் குற்றங்களில் மூழ்கடித்துவிட்டது. மாநிலத்தில் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்க பாஜவால் மட்டுமே முடியும்.
2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், பாஜ 19% ஓட்டுக்களை பெற்றது. பாஜ எங்கெல்லாம் 19% ஓட்டுக்களை பெறுகிறதோ, அங்கெல்லாம் அது ஒடிசா, அசாம், மணிப்பூர், திரிபுரா அல்லது உத்தராகண்ட் என எந்த மாநிலமாக இருந்தாலும், சட்டசபை தேர்தலில் ஆட்சி அமைத்தது. அதேபோல் வரும் பஞ்சாப் சட்டசபை தேர்தலிலும் பாஜ ஆட்சி அமைக்கும்.
பஞ்சாப் கடன், போதைப்பொருள், ஊழல், மதமாற்றம் மற்றும் குண்டர் கும்பல் கலாசாரம் போன்ற பிரச்னைகளை எதிர்கொள்கிறது. இவை மாநிலத்தை நாசமாக்கியுள்ளன. தொழில்கள் பஞ்சாபை விட்டு வெளியேறுகின்றன, விவசாயிகளைப் பொறுத்தவரை, அவர்களை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை.
இளைஞர்கள் வேலையின்மையை எதிர்கொள்கின்றனர். நீங்கள் (மக்கள்) காங்கிரஸ், சிரோமணி அகாலிதளம் மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்புகளை வழங்கியுள்ளீர்கள். இப்போது பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள். பஞ்சாபில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்து பிரச்னைகளைத் தீர்ப்போம். இவ்வாறு அமித்ஷா பேசினார்.
