சென்னை:
சதிகளை முறியடிக்க ஒரே வழி மாநில சுயாட்சி. அனைத்து மாநிலங்களும் இணைந்து
நடத்தும் கூட்டாட்சியாக மத்திய அரசு இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின்
பேசினார்.
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் தமிழகம் வழிகாட்டி வருகிறது.
அண்ணாதுரை இறுதியில் எழுதியது தான் மாநில சுயாட்சி கொள்கை. மத்திய
-மாநில அரசு உறவு குறித்து ஆய்வு செய்த குழுவின் அறிக்கையை சட்டசபையில்
வைக்க இருக்கிறோம். அனைத்து அதிகாரங்களை வைத்து மத்திய அரசு மாநில அரசுகளை
மதிப்பதில்லை. அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு தன்வசம் வைத்துள்ளது.
கூட்டாட்சி
அனைத்து
மாநிலங்களும் சுயாட்சி பெற்றதாக இருக்க வேண்டும். மாநில சுயாட்சி
கொள்கையை அரசியலை மறந்து அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். குட்டக் குட்டக் குனிபவர்கள் அல்ல நாம்; நாம் தான் இதை செய்ய வேண்டும். நம்மை
விட்டால் நிச்சயம் யாரும் இல்லை. இன்னும் எத்தனை காலங்கள் அவர்கள்
கொடுக்கும் இடத்திலும் நாம் வாங்கும் இடத்திலும் இருப்பது? அனைத்து
மாநிலங்களும் இணைந்து நடத்தும் கூட்டாட்சியாக மத்திய அரசு இருக்க
வேண்டும்.
மத்திய அரசு -மாநில அரசு உறவு பற்றி ஆய்வு செய்ய 1969ல்
ராஜ மன்னார் குழுவை கருணாநிதி அமைத்தார். நீதிபதி ராஜ மன்னார் குழு அளித்த
அறிக்கையை சட்டசபையில் தீர்மானமாகவும் கருணாநிதி நிறைவேற்றினார். அதைத்
தொடர்ந்து பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்த போதும் எந்த
முடிவும் எடுக்கப்படவில்லை. இப்போது வரை ஏமாற்றம் தொடர்கிறது.
மாநிலத்தில் சுயாட்சி வேண்டும்; மத்தியில் கூட்டாட்சி மலர வேண்டும்.
கூட்டாட்சி தத்துவம்
வரிப்
பகிர்வு குறைப்பு, ஒத்திசைவு பட்டியலில் உள்ள அம்சங்களை மத்திய அரசு
பட்டியலுக்கு மாற்றுவது மாநில சுயாட்சியை பாதிக்கிறது. மாநிலத்தில்
சுயாட்சியை உறுதி செய்ய இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மாற்றம் செய்ய
வேண்டும். கூட்டாட்சி தத்துவத்தை அரசியல் சட்டத்தின் கோட்பாடாக மாற்ற
வேண்டும். இந்தியாவை முதிர்ச்சி அடைந்த கூட்டாட்சியாக மாற்றுவதற்கான
முயற்சிகளில் ஈடுபட வேண்டும். மாநிலங்கள் நெருக்கடியில் இருந்து மீள ஒரே
மருந்து மாநில சுயாட்சி தான். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
