அக்கூட்டத்தில் பேசிய திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள், “திமுக பலவீனமாக இருக்கும் தொகுதிகளை நமக்குத் தள்ளிவிட வாய்ப்பிருக்கிறது, அதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்” என எச்சரித்தனர். ஆனால் செல்வப்பெருந்தகையின் ஆதரவாளரான பீட்டர் அல்போன்ஸோ, “திமுக எடுத்த சர்வேயில் சில சிட்டிங் எம்எல்ஏ-க்களுக்குச் சிக்கல் இருப்பதாகத் தெரிகிறது. எனவே திமுக கொடுக்கும் தொகுதிகளைப் பெற்றுக்கொள்வதுதான் வெற்றிக்குக் கைகொடுக்கும்” என்றார். இது கூட்டத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
மேலும் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் பலரும், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் தொகுதிகளின் பட்டியலைத் தனியாக வழங்கியுள்ளனர். அந்தப் பட்டியலை முன்வைத்து கிரிஷ் சோடங்கர் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டிருந்தார். இதற்கிடையில் புதுச்சேரியில் திமுக – காங்கிரஸ் கூட்டணியில் மோதல் வெடித்திருக்கும் நிலையில், அங்கு தொகுதிகளை இறுதி செய்யும் பணிகளில் கிரிஷ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
