சபரிமலை: சபரிமலையில் 10 நாள் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்., ஒன்றாம்

சபரிமலை: சபரிமலையில் 10 நாள் பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்., ஒன்றாம் தேதி ஆராட்டு நடக்கிறது.

உத்திர திருவிழாவுக்காக நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு நடை திறந்து பூஜைகள் தொடங்கியது. கோயில் முன்புறமுள்ள மண்டபத்தில் கொடிப்பட்டத்துக்கு தந்திரி மகேஷ் மோகனரரு சிறப்பு பூஜைகள் நடத்தினார். இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது.

நேற்று அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் வழக்கமான பூஜைகள் நடந்தது. காலை 10:00 மணிக்கு பிம்பசுத்தி பூஜைகளை தொடர்ந்து கோயில் முன்புறமுள்ள மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் கொடி பட்டம் கோயிலை சுற்றி வலம் வந்து கொடிமரம் அருகே கொண்டுவரப்பட்டது.

அங்கு பூஜைகளுக்கு பின்னர் காலை 11:50 மணிக்கு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர்.

ஒன்பதாம் நாள் விழா வரை தினமும் மதியம் உச்ச பூஜைக்கு முன்னோடியாக உற்ஸவ பலி, இரவு அத்தாழ பூஜைக்கு பின்னர் ஸ்ரீ பூதபலியும் நடை பெறுகிறது.

மார்ச் 31- இரவு அத்தாழபூஜைக்கு பின்னர் சுவாமி பள்ளி வேட்டைக்காக சரங்குத்திக்கு எழுந்தருளுவார். ஏப்ரல் 1 ம் தேதி காலை நடை திறந்து உஷ பூஜை நிறைவு பெற்று 9:00 மணிக்கு சுவாமி யானை மீது பம்பைக்கு எழுந்த ருளுவார்.

மதியம் பம்பை திருவேணி சங்கத்தில் ஆராட்டு நடைபெறும். அதன் பின்னர் மதியம் 3:00 மணிக்கு சுவாமி சன்னிதானத்திற்கு திரும்ப எழுந்தருளுவார். சன்னிதானம் வந்ததும் திருக்கொடி இறக்கப்பட்டு விழா நடைபெறும். தொடர்ந்து நடை அடைக்கப்படும்.

மார்ச் 31 வரை விழா நாட்களில் காலை 8 :15 மணி வரை மட்டுமே நெய் அபிஷேகம் நடைபெறும். ஏப்ரல் 1ம் தேதி ஆராட்டு தினத்தில் நெய்யபிஷேகம் நடைபெறாது.

Source link