சபரிமலை தங்கம் கொள்ளை வழக்கு: சிறையிலிருந்து சிரித்தபடி வெளியே வந்த உன்னிகிருஷ்ணன் போற்றி

திருநடையில் தங்கம் கொள்ளையடித்த வழக்கில் ஜாமின் கிடைக்காததால் உன்னிகிருஷ்ணன் சிறையில் தொடர்ந்து வந்தார். கைது செய்யப்பட்டு 90 நாட்கள் ஆகியும் எஸ்.ஐ.டி. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தால் இரண்டாவது வழக்கிலும் கடந்த மாதம் 21-ம் தேதி அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டிருந்தது.

சிறையில் இருந்து வெளியே வந்த உன்னிகிருஷ்ணன் போற்றி

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் துவார பாலகர்கள் சிற்பங்களில் தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு மற்றும் கருவறை திருநடையில் பூசப்பட்ட தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கு குறித்தும் ஐகோர்ட் நியமித்த ஸ்பெஷல் இன்வெஸ்டிகேசன் டீம் (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்தி வருகிறது.

இரண்டு தனித்தனி வழக்குகள் பதியப்பட்ட நிலையில் இரண்டு வழக்குகளிலும் குற்றம்சாட்டப்பட்டவர்கள் பட்டியலில் முதல் பெயராக உன்னிகிருஷ்ணன் போற்றி குறிப்பிடப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றி கடந்த அக்டோபர் மாதம் 17-ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல முக்கிய புள்ளிகள் குறித்து தகவல் வெளியானது.

அதைத்தொடர்ந்து தங்கம் சம்பந்தப்பட்ட அலுவலக புத்தகத்தைச் சரியாகப் பராமரிக்காதது உள்ளிட்ட தவறுகளைச் செய்ததாக சபரிமலை முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆப்பீசர் முராரி பாபு, முன்னாள் எக்ஸிகியூட்டி ஆப்பீசர் சி.சுதீஷ்குமார், முன்னாள் திருவாபரணம் கமிஷனர் கே.எஸ்.பைஜூ, முன்னாள் தேவசம்போர்டு கமிஷனர் என்.வாசு, முன்னாள் தேவசம்போர்டு தலைவர் ஏ.பத்மகுமார், முன்னாள் அட்மினிஸ்டேட்டிவ் ஆப்பீசர் எஸ்.ஸ்ரீகுமார், செம்புகவசத்தின் மீது பதிக்கப்பட்ட தங்கத்தகட்டை தனியாகப் பிரித்தெடுக்க உதவிய சென்னை ஸ்மார்ட் கிரியேசன் நிறுவன உரிமையாளர் பங்கஜ் பண்டாரி, சபரிமலையில் கொள்ளையடிக்கப்பட்ட தங்கத்தை வாங்கிய கர்நாடகாவின் பெல்லாரியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் கோவர்த்தன், திருவிதாங்கூர் தேவசம்போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார், சபரிமலை தந்திரி கண்டரரு ராஜீவரரு, திருவிதாங்கூர் தேவசம்போர்டு உறுப்பினர் கே.பி.சங்கரதாஸ் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

உன்னிகிருஷ்ணன் போற்றி
உன்னிகிருஷ்ணன் போற்றி

கோர்ட் வழிகாட்டுதல்படி வழக்கு நடைபெற்றுவரும் நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் ஜாமின் கேட்டு கோர்டை நாடி வருகின்றனர். இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்ட முராரி பாபு, ஸ்ரீகுமார், சுதீஷ்குமார் ஆகியோர் ஏற்கனவே ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே துவார பாலகர்கள் சிற்பத்தில் தங்கம் கொள்ளையடித்த வழக்கில் உன்னிகிருஷ்ணன் போற்றிக்கு ஏற்கனவே ஜாமின் கிடைத்திருந்தது. ஆனாலும், திருநடையில் தங்கம் கொள்ளையடித்த வழக்கில் ஜாமின் கிடைக்காததால் அவர் சிறையில் தொடர்ந்து வந்தார்.

கைது செய்யப்பட்டு 90 நாட்கள் ஆகியும் எஸ்.ஐ.டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாத காரணத்தால் இரண்டாவது வழக்கிலும் கடந்த மாதம் 21-ம் தேதி உன்னிகிருஷ்ணன் போற்றிக்கு ஜாமின் வழங்கப்பட்டிருந்தது. இரண்டாவது வழக்கில் கோர்ட் வழங்கிய காவல் தேதி முடிவடையாததால் அவர் சிறையில் தொடர்ந்தார்.

சிறையில் இருந்து வெளியே வந்த உன்னிகிருஷ்ணன் போற்றி
சிறையில் இருந்து வெளியே வந்த உன்னிகிருஷ்ணன் போற்றி

கோர்ட் காவல் தேதி முடிவடைந்த நிலையில் உன்னிகிருஷ்ணன் போற்றி தரப்பு கோர்ட்டை நாடியது. கேரளா மாநிலத்தில் இருந்து வெளியேறக்கூடாது, பத்தனம்திட்டா மாவட்டத்துக்குள் செல்லக்கூடாது, பாஸ்போர்ட் கோர்ட்டில் ஆஜர்படுத்த வேண்டும், அதிகாரிகள் விசாரணைக்கு அழைக்கும்போது ஆஜராக வேண்டும், சாட்சிகளை மிரட்டக்கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து நேற்று மாலை உன்னிகிருஷ்ணன் போற்றி சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். கரமனா சிறையில் இருந்து சிரித்தபடி வெளியே வந்த உன்னிகிருஷ்ணன் போற்றியை அவரது மனைவி மற்றும் குடும்ப உறுப்பினர்கள் வரவேற்றனர். இந்த வழக்கில் இதுவரை 4 பேர் ஜாமின்  பெற்று வெளியே வந்துள்ளனர்.

Source link