கோட்டயம்: ”சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து, 2018ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பா.ஜ.,வே காரணம்,” என, கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் என்.வி.வாசவன் குற்றஞ்சாட்டினார்.
கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில், உலக பிரசித்தி பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவில் உள்ளது.
இக்கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து, 2018ல் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பு, அப்போது கேரளாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.
இவற்றை ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, அடுத்த மாதம் முதல் விசாரிக்க உள்ளது.
கேரளாவில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இந்த விவகாரத்தில், ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி அரசு என்ன நிலைப்பாடு எடுக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், கேரள தேவஸ்வம் போர்டு அமைச்சர் என்.வி.வாசவன் நேற்று கூறியதாவது:
அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதித்து, 2018ல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு பா.ஜ.,வே காரணம்.
அக்கட்சியுடன் தொடர்புடைய பெண் வழக்கறிஞர்கள் தான், உச்ச நீதிமன்றத்தை அணுகி இந்த தீர்ப்பை பெற்றனர். துவக்கத்தில் இந்த தீர்ப்பை கொண்டாடிய பா.ஜ., பின் நிலைப்பாட்டை மாற்றி இரட்டைவேடம் போடுகிறது.
உச்ச நீதிமன்றத்தில், 2007-ல் நாங்கள் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் என்ன கூறியிருந்தோமோ, அதிலேயே தற்போதும் உறுதியாக இருக்கிறோம். சபரிமலை தொடர்பான சடங்கு சம்பிரதாய விஷயங்களில், அத்துறை சார்ந்த நிபுணர்களே முடிவு எடுக்க வேண்டும் என்பதே எங்கள் கருத்து.
உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு சில அரசியலமைப்பு ரீதியான விளக்கங்களை கேட்டுள்ளது. இதற்கு பதிலளிக்க அட்வகேட் ஜெனரல் மற்றும் உச்ச நீதிமன்ற சட்ட நிபுணர்களை நியமித்துள்ளோம். அவர்கள் உரிய முறையில் பதிலளிப்பர்.
அரசின் நிலைப்பாடும், கட்சியின் நிலைப்பாடும் ஒன்றே. இந்த அரசு எப்போதும் பக்தர்கள் பக்கமே நிற்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்துவது அரசின் கடமை.
அதையே நாங்கள், 2018ல் செய்தோம். மற்றபடி, பெண்கள் கோவிலில் நுழைய தனிப்பட்ட முறையில் ஆர்வம் காட்டவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
