சபலென்கா, சின்னர் 'சாம்பியன்': இந்தியன் வெல்ஸ் டென்னிசில்

இந்தியன் வெல்ஸ்: இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் பெலாரசின் சபலென்கா, இத்தாலியின் சின்னர் சாம்பியன் பட்டம் வென்றனர்.

அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் நகரில், பரிபாஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில், பெலாரசின் அரினா சபலென்கா, கஜகஸ்தானின் எலினா ரிபாகினா மோதினர். முதல் செட்டை 3-6 என இழந்த சபலென்கா, பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், ‘டை பிரேக்கர்’ வரை சென்ற 3வது செட்டை 7-6 என தன்வசப்படுத்தினார்.

இரண்டு மணி நேரம், 31 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய சபலென்கா 3-6, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் தனது முதல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இதற்கு முன் 2 முறை (2023, 2025) பைனல் வரை சென்றிருந்தார். இதில், 2023ல் நடந்த பைனலில் ரிபாகினாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தார் சபலென்கா. தவிர இது, டபிள்யு.டி.ஏ., அரங்கில் சபலென்கா கைப்பற்றிய 23வது ஒற்றையர் பட்டம்.

இத்தொடரில் பைனல் வரை சென்ற ரிபாகினா, டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் பிரிவு தரவரிசையில் 2வது இடத்துக்கு முன்னேறினார். முதலிடத்தில் சபலென்கா நீடிக்கிறார். போலந்தின் இகா ஸ்வியாடெக் 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.

சின்னர் அபாரம்: ஆண்களுக்கான ஏ.டி.பி., மாஸ்டர்ஸ் ஒற்றையர் பைனலில் இத்தாலியின் ஜானிக் சின்னர், ரஷ்யாவின் டேனில் மெத்வெடேவ் மோதினர். அபாரமாக ஆடிய சின்னர் 7-6, 7-6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் தனது முதல் பட்டத்தை தட்டிச் சென்றார். தவிர இது, ஏ.டி.பி., அரங்கில் சின்னர் கைப்பற்றிய 25வது ஒற்றையர் பட்டம்.

Source link