சபாநாயகருக்கு எதிரான விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை 'பல்லிளிப்பு'! காங்கிரசுக்கு போக்கு காட்டும் மம்தாவின் திரிணமுல் காங்கிரஸ்

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்தில், காங்., – தி.மு.க., உட்பட, ‘இண்டி’ கூட்டணி கட்சிகளின், 118 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டுள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., – எம்.பி.,க்கள் யாரும் கையெழுத்திடவில்லை. இதன் மூலம், இண்டி கூட்டணியின், ‘ஒற்றுமை’ மீண்டும் ஒரு முறை அம்பலமாகி உள்ளது.

பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கியதில் இருந்தே, லோக்சபாவில் அலுவல்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. ஜனாதிபதி உரை மீதான விவாதத்திற்கு, மரபின் படி, பிரதமர் வழங்க வேண்டிய பதிலுரை கூட நடக்கவில்லை.

ராணுவ முன்னாள் தளபதி நரவனே எழுதி, இதுவரை வெளியாகாத அவரது சுயசரிதையான, ‘போர் ஸ்டார்ஸ் ஆப் டெஸ்டினி’ என்ற புத்தகத்தை வைத்து, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கிளப்பிய விவகாரத்தால், பட்ஜெட் மீதான விவாதமும் முடங்கி உள்ளது.

இந்நிலையில், லோக்சபாவில் நேற்று காலை கேள்வி நேரம் துவங்கியது. கூடவே அமளியும் துவங்கியது.

ஒத்தி வைப்பு

கடும் அமளிக்கிடையே பேசிய பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு, ”உங்கள் அனைவரையும் கைகூப்பி கேட்கிறேன். தயவு செய்து அலுவல்களை தடுக்காதீர்கள். பட்ஜெட் மீதான விவாதத்தை நடத்த அனுமதியுங்கள். முற்றுகையிடுவதன் மூலம், சபையின் கண்ணியத்தை சீர்குலைக்காதீர்கள்,” என்றார். இருந்தும் அமளி தொடரவே, சபை மதியம் வரை ஒத்தி வைக்கப்பட்டது.

மதிய உணவு இடைவேளையின் போது, காங்., உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள், லோக்சபா செக்ரட்டரி ஜெனரல் உத்பல் குமார் சிங்கின் அலுவலகத்திற்கு சென்றனர். அங்கு, சபாநாயகர் ஓம் பிர்லா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர வேண்டுமென்று வலியுறுத்தி நோட்டீசை வழங்கினர்.

இதில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 118 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டனர். ஆனால், திரிணமுல் காங்., – எம்.பி.,க்கள் யாரும் கையெழுத்திடவில்லை.

பின், நிருபர்களிடம் பேசிய லோக்சபா காங்., துணைத் தலைவர் கவுரவ் கோகோய், ”விதி எண், 94 (சி)ன் கீழ் நோட்டீஸ் தந்துள்ளோம். நாங்கள் பேசுவதற்கு தொடர்ச்சியாக வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால், எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. அதனாலேயே இந்த முடிவுக்கு தள்ளப்பட்டோம். இதில், 118 எம்.பி.,க்கள் கையெழுத்திட்டுள்ளனர்,” என்றார்.

நோட்டீசில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுலுக்கு பேச அனுமதி மறுப்பு; ஆளுங்கட்சி எம்.பி.,க்களுக்கு மட்டும் பேச வாய்ப்பு; பிரதமர் மோடியை தாக்க முயற்சித்ததாக பெண் எம்.பி.,க்கள் மீது குற்றம் சுமத்தியது போன்ற காரணங்களை எதிர்க்கட்சிகள் குறிப்பிட்டுள்ளனர்.

அம்பலம்

எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்ததை அறிந்த சபாநாயகர் ஓம் பிர்லா, உடனடியாக பரிசீலனைக்கு எடுத்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்கும்படி, செகரட்டரி ஜெனரல் அலுவலகத்தை கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மானம் முடிவுக்கு வரும் வரை, லோக்சபாவுக்கு சபாநாயகர் ஓம் பிர்லா வர மாட்டார் என, தகவல்கள் தெரிவிக்கின்றன.

உணவு இடைவேளைக்கு பின், லோக்சபாவில் திட்டமிட்டபடி பட்ஜெட் மீதான விவாதம் துவங்கியது. பார்லி., உள்ளேயும், வெளியேயும் நடக்கும் ஆர்ப்பாட்டம், அமளி போன்றவற்றில் காங்கிரசுடன் சேர்ந்து, தி.மு.க., சமாஜ்வாதி, இடதுசாரிகள் போன்ற கட்சிகள் குரல் கொடுக்கின்றன.

ஆனால், துவக்கம் முதலே, திரிணமுல் காங்., மட்டும் காங்கிரசோடு சேராமல் தனித்தே செயல்படுகிறது. நம்பிக்கையில்லா தீர்மான விவகாரத்திலும் அக்கட்சி தனி ரூட்டில் பயணிக்கிறது.

இதன் மூலம், ‘இண்டி’ கூட்டணியின், ‘ஒற்றுமை’ மீண்டும் ஒரு முறை அம்பலமாகி உள்ளது. இதற்கிடையே, லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில், ராகுல் இன்று பேச உள்ளதாகக் கூறப்படுகிறது.

‘கால அவகாசம் தருவோம்’

புதிய ரூட்டில் திரிணமுல் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீசில் கையெழுத்திடாதது குறித்து, லோக்சபா எம்.பி.,யும், திரிணமுல் காங்., பொதுச்செயலருமான அபிஷேக் பானர்ஜி நேற்று கூறியதாவது; நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீசில் கையெழுத்திடுவதில் எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. எம்.பி.,க்கள் சஸ்பெண்ட், எதிர்க்கட்சித் தலைவரை பேச அனுமதிக்காதது, பெண் எம்.பி.,க்கள் மீது குற்றம் சுமத்தியது, பாரபட்சமாக செயல்படுவது என, எல்லாமே உண்மை தான்.
அதே சமயம், சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு ஒரு வாய்ப்பு தர வேண்டும். நம் பிரச்னைகளை குறிப்பிட்டு அவருக்கு கடிதம் எழுதுவோம். அது தொடர்பாக இரண்டு அல்லது மூன்று நாட்களில் அவர் நடவடிக்கை எடுக்காவிட்டால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வரலாம். அப்போது, எங்கள் எம்.பி.,க்கள் அனைவரும் தயங்காமல் கையெழுத்திடுவர். இவ்வாறு அவர் கூறினார்.

பா.ஜ., – பெண் எம்.பி.,க்கள் சபாநாயகருக்கு கடிதம்

லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பா.ஜ., – பெண் எம்.பி.,க்கள் எழுதிய கடிதம்: லோக்சபாவில், கடந்த 4ம் தேதி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபையின் மையப்பகுதிக்கு வந்தது மட்டுமன்றி, மேஜை மீது ஏறி காகிதங்களை கிழித்து சபாநாயகர் இருக்கையை நோக்கி வீசினர். மேலும், சில பெண் எம்.பி.,க்கள் ஆக்ரோஷமான முறையில் பதாகைகளுடன் ஆளுங்கட்சி வரிசைக்குள்ளேயே நுழைந்தனர்.
அவர்கள் பிரதமரின் இருக்கையை முற்றுகையிட்டதுடன், மூத்த அமைச்சர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்கும் சென்று அமளியில் ஈடுபட்டனர். கட்சியின் மூத்த தலைவர்களின் அறிவுறுத்தலின்படி நாங்கள் அமைதியாக இருந்தோம். இல்லையெனில் நிலைமை இன்னும் மோசமாகி இருக்கும். அநாகரிகமாக நடந்து கொண்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘அசிங்கம் அரங்கேறியிருக்கும்’

கடந்த 4ம் தேதி லோக்சபாவில் நடந்த அமளி குறித்த வீடியோவை பார்லி., விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு வெளியிட்டுள்ளார். அதில், பதிலுரை வழங்க பிரதமர் மோடி வருவதற்கு முன், மூத்த அமைச்சர்கள் அனைவரும் அவரவர் இருக்கைகளில் தயாராக இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பெண் எம்.பி.,க்கள், பிரதமர் சபைக்குள் வரும் வழியை மறித்து நிற்கின்றனர். பிரதமர் இருக்கையை முற்றுகையிட்ட அவர்கள் ஆவேசமாக முழக்கமிடுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில், ”எதிர்க்கட்சி எம்.பி.,க்களின் இந்த நடவடிக்கையை நியாயப்படுத்த முடியுமா? அனைத்து எல்லைகளையும் அவர்கள் மீறி விட்டனர். எங்களது பெண் எம்.பி.,க்களுக்கு அனுமதி தந்திருந்தால், மிக மிக அசிங்கமான காட்சிகள் அன்றைய தினம் அரங்கேறியிருக்கும்,” என்றார்.

கையெழுத்திடாத ராகுல்

நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான நோட்டீசில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கையெழுத்திடவில்லை. பார்லி., நடைமுறைகளின்படி, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் என்ற மிக முக்கியமான அரசிலயமைப்பு சட்டப் பதவியில் இருந்து கொண்டு, சபாநாயகரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தும் நோட்டீசில் கையெழுத்திடுவது சரியான மரபல்ல என்பதால், ராகுல் கையெழுத்திடவில்லை என கூறப்படுகிறது.

– நமது டில்லி நிருபர் –

Source link