புதுடில்லி: லோக்சபா வரலாற்றில் மிக அரிய நிகழ்வாக, வரும் 9ம் தேதி சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பதவி நீக்க தீர்மானம் மீதான விவாதம் நடக்கிறது. எனவே, அன்று அவர் சபையை வழிநடத்த மாட்டார். மாறாக ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் வரிசையில் அமர்ந்து விவாதத்தை கவனிப்பார்.
பார்லி., பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு, வரும் 9ம் தேதி துவங்கவுள்ளது. இதில், பல்வேறு பிரச்னைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. அதே போல், முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இந்தச் சூழலில், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் அமர்வில், ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசுவதற்கு அனுமதி தரவில்லை என்றும் எம்.பி.,க்கள் எட்டு பேரை சஸ்பெண்ட் செய்தது கண்டனத்துக்குரியது என்றும் எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
நோட்டீஸ்
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக, சபாநாயகருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வரக் கோரி நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.லோக்சபா செயலரிடம் காங்., கொறடா சுரேஷ் சார்பில் வழங்கப்பட்ட அந்த நோட்டீஸில், காங்கிரஸ், தி.மு.க., சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் 118 பேர் கையெழுத்திட்டுள்ளனர். திரிணமுல் காங்கிரஸ் எம்.பி.,க்கள் அதில் கையெழுத்திடவில்லை.
இந்நிலையில், கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு வரும் 9ம் தேதி கூடவுள்ள நிலையில், அன்று சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரக் கோரி, எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸின் கீழ் விவாதம் நடக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
எனவே, அன்றைய தினம், அவர் சபையை வழிநடத்த மாட்டார். மாறாக ஆளுங்கட்சி எம்.பி.,க்கள் வரிசையில் உள்ள இருக்கையில் அமர்ந்து, விவாதத்தை கவனிப்பார்.
உரிமை
இது குறித்து அரசியல் சாசன நிபுணர் பி.டி.டி.ஆச்சாரி கூறியதாவது:
அரசியல் சாசன சட்டம் 96வது பிரிவின் கீழ், சபாநாயகருக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரும்போது, அவர் சபைக்கு தலைமை வகிக்க முடியாது. ஆனால், சபையில் அமர்ந்து எதிர்க்கட்சிகளின் புகார்களுக்கு விளக்கம் அளிக்க அவருக்கு உரிமை இருக்கிறது.
லோக்சபாவில் உள்ள மொத்த எம்.பி.,க்களில், பெரும்பாலான எம்.பி.,க்களின் ஆதரவு இருந்தால் மட்டுமே, சபாநாயகரை பதவியில் இருந்து நீக்க முடியும்.
எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் வழங்கிய 14 நாட்களுக்கு பிறகு தான், இந்த விவகாரம் விவாதத்திற்கு வரும். அப்போது சபையில் உள்ள எம்.பி.,க்களில் குறைந்தது 50 பேராவது எழுந்து நின்று ஆதரவு தெரிவிக்க வேண்டும். அப்போது தான், நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓட்டெடுப்பு நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
