முல்லன்புர்: கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், பிரியான்ஷ் ஆர்யா அரைசதம் கைகொடுக்க, பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
புதிய சண்டிகரில் உள்ள முல்லன்புர் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் பஞ்சாப், ஐதராபாத் மோதின. ‘டாஸ்’ வென்ற பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
அபிஷேக் விளாசல்
ஐதராபாத் அணிக்கு அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட் அதிரடி துவக்கம் தந்தனர். அர்ஷ்தீப் சிங் ஓவரில் அபிஷேக் 24 ரன் (4,4,6,6) விளாசினார். தொடர்ந்து, வைஷாக் ஓவரில் 24 ரன் (6,6,6,6) எடுத்தார். அபிஷேக் 18 பந்தில் அரைசதம் எட்டினார். பார்ட்லெட் ஓவரில் ஹெட், ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். ‘பவர் பிளே’ (முதல் 6 ஓவர்) முடிவில் ஐதராபாத் 105/0 ரன் எடுத்தது.
இந்த சமயத்தில் சஷாங்க் சிங் திருப்பம் ஏற்படுத்தினார். இவரது ஒரே ஓவரில் ஹெட் (38), அபிஷேக் (78 ரன், 28 பந்து, 5×4, 8×6) அவுட்டாகினர். கேப்டன் இஷான் கிஷான், 27 ரன்னுக்கு வெளியேற, ரன் வேகம் குறைந்தது. அனிகேத் வர்மா, 18 ரன் எடுத்தார். கிளாசன், 39 ரன்னுக்கு ‘பெவிலியன்’ திரும்பினார். முதல் 6 ஓவரில் 105/0 எடுத்த நிலையில், அடுத்த 14 ஓவரில் 114/6 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. ஐதராபாத் அணி 20 ஓவரில் 219/6 ரன் எடுத்தது.
கலக்கல் துவக்கம்
சவாலான இலக்கை விரட்டிய பஞ்சாப் அணிக்கு பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா வலுவான அடித்தளம் அமைத்தனர். இருவரும் பவுண்டரி, சிக்சர்களாக விளாச, ஸ்கோர் படுவேகமாக உயர்ந்தது. ஹர்ஷல் படேல் ஓவரில் 21 ரன் (6,6,4,4,1) விளாசிய பிரியான்ஷ், 16 பந்தில் அரைசதம் எட்டினார். ‘பவர்பிளே’ முடிவில் பஞ்சாப் அணி 93/0 ரன் எடுத்தது. பிரியான்ஷ், 57 ரன்னுக்கு (20 பந்து, 5X4, 5X6) அவுட்டானார். சிறிது நேரத்தில் பிரப்சிம்ரன், 51 ரன்னுக்கு வெளியேறினார். கொனாலி (11) நிலைக்கவில்லை.
ஷ்ரேயஸ் அரைசதம்
பின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் துணிச்சலாக விளையாடினார். ஹர்ஷல் படேல் ஓவரில் 18 ரன் (6,4,6) விளாசினார். அடுத்து, ஈஷான் மலிங்கா ஓவரில் (4,6,6) மொத்தம் 18 ரன் எடுத்தார். 24 பந்தில் அரைசதம் எட்டினார். நேஹல் வதேரா, 14 ரன் எடுத்தார். அபிஷேக் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய சஷாங்க் சிங், வெற்றியை உறுதி செய்தார். பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 223/4 ரன் எடுத்து வெற்றி பெற்றது. ஷ்ரேயஸ் (69 ரன், 33 பந்து, 5X4, 5X6), சஷாங்க் (16) அவுட்டாகாமல் இருந்தனர்.
198 ரன்இரு அணிகளும் (ஐதராபாத் 105/0, பஞ்சாப் 93/0) சேர்ந்து நேற்று ‘பவர்பிளே’ ஓவரில் (12) 198 ரன் எடுத்தன. இது, ஆண்கள் ‘டி-20’ வரலாற்றில், ‘பவர்பிளே’யில் விக்கெட் இழக்காமல் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர். இதற்கு முன் 158/0 ரன் (நியூசி-ஆஸி., 2018, ஆக்லாந்து) எடுக்கப்பட்டன. கிரிக்கெட் லீக் தொடரில், முன்னதாக 155/0 ரன் (பெங்களூரு-ஐதராபாத், 2024, பெங்களூரு) எடுக்கப்பட்டிருந்தது.
* ‘பவர்பிளேயி’ல் (1-6 ஓவர்) இரு அணிகளும் சேர்த்து நேற்று 16 சிக்சர் அடித்தது புதிய சாதனை. முன்னதாக 15 சிக்சர் (ஐதராபாத்-டில்லி, 2024, டில்லி) அடிக்கப்பட்டிருந்தன.
