“சமூக நீதி கிடைக்கவில்லை” – தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய வேல்முருகன் பேட்டி!

தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் மாதம் 23ஆம் தேதி (23.04.2026) தேர்தல் நடைபெற உள்ளது. இதன் காரணமாகத் தேர்தல் களம் படு தீவிரம் அடைந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சிகள் கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த தமிழக வாழ்வுரிமை கட்சியானது இந்த தேர்தலில் போட்டியிடக் கூடுதல் இடங்களை தி.மு.க.விடமிருந்து கேட்டதாகக் கூறப்படுகிறது. இதற்கு திமுக சார்பில் எந்த பதிலும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. 

இதனால் திமுக கூட்டணியில் வெளியேறுவதாக, தமிழக வாழ்வுரிமை கட்சி தனித்துப் போட்டியிடமுடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியானது. அதோடு அக்கட்சியின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வேல்முருகன் வெளியிட உள்ளதாகக் கூறப்பட்டது. இத்தகைய சூழலில் தான் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் நீடிப்பதா? அல்லது கூட்டணியில் இருந்து வெளியேறித் தனித்துப் போட்டியிடுவதா? என்ற முடிவை வேல்முருகன் இன்று (22.03.2026) அறிவிக்க உள்ளார் எனத் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வேல்முருகன்  தி.மு.க. கூட்டணியில் இருந்து த.வா.க. விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மற்றொருபுறம் வட மாவட்டங்களில் தமிழக வாழ்வுரிமை கட்சிக்கு வாக்கு வங்கி உள்ள ஒரு சில தொகுதிகளில் தனித்துப் போட்டியிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வேல்முருகன் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும் இது தொடர்பாக வேல்முருகன் அளித்துள்ள பேட்டியில், “தமிழக வாழ்வுரிமை கட்சி என்பது தமிழர் நிலத்தில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்குமான ஒரு கட்சி. அனைத்து மக்களுக்குமான கிடைக்க வேண்டிய சமூக நீதி கிடைக்கப்பெறவில்லை. வேலைவாய்ப்பு கிடைக்கப்பெறவில்லை. மாணவர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் பிரச்சனைகள் தீர்க்கப்படாமல் இருக்கிறது. இதையெல்லாம் நான் சுட்டிக்காட்டி முதலமைச்சருடைய கவனத்திற்கு எடுத்துச் சென்று அதைத் தீர்ப்பதற்கு முயற்சி எடுக்கின்ற போது அதற்கு முட்டுக்கட்டையாக இருக்கிற கார்ப்பரேட் பெரும் முதலாளிக்கு ஆதரவாக இருக்கின்ற சக்திகள் இன்றைக்கு முதலமைச்சரை சுயமாகச் சிந்தித்து முடிவெடுப்பதற்கு அனுமதிக்க மறுத்து இங்கு அதிகாரிகள் ஆட்சி கொட்டமடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நான் சொன்ன குற்றத்திற்காகவே இன்றைக்கு அரசியல் ரீதியாகக் கூட தேர்தல் களத்திலும் அவர்கள் இதிலே தலையிட்டு இன்றைக்குக் குழப்பங்களை விளைவித்துக் கொண்டிருக்கிறார்கள். 

எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை. திமுக தலைமையிலான இந்த கூட்டணியில் இத்தனை ஆண்டுக் காலம் இருந்தேன். ஐந்து ஆண்டுக் காலம் திமுகவின் சார்பாக உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று நான் ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கான குரலாக எனது குரல் ஒளித்திருக்கிறது. அதற்கான வாய்ப்பை வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சருக்கும் அதேபோன்று தோழமையுடனும் கூட்டணியுடனும் நட்பு சக்தியாக என்னோடு கைகோர்த்து தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பில் பல போராட்டங்களில் பங்கெடுத்து இந்த நிமிடம் வரையிலும் இந்த கூட்டணியில் தொடர வேண்டும் என்று என் மீது வைத்திருக்கிற மாறாத அன்பின் காரணமாகப் பற்றின் காரணமாக இந்த நிமிடம் வரையிலும் தொடர்பு கொண்டு எனக்கு ஆறுதல் சொல்லி  பேசிய தலைவர்களான திருமாவளவன், வீரபாண்டியன், பாலகிருஷ்ணன்,  சண்முகம், வைகோ, ஜவாஹிருல்லா, ஈஸ்வரன் போன்ற அனைத்து தலைவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். 

velmurugan-tvk
கோப்புப்படம்

தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பில் உலக தமிழர்களின் வாழ்வுரிமைக்காகவும் ஈழ இன பிரச்சனைகளைக் குறித்தும் தமிழ்ச் சமூகத்தின் வாழ்வுரிமைக்காகவும் என்னால் தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து நடத்தப்படுகின்ற தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பில் தொடர்ந்து நாம் பயணிப்போம் என்று எனக்குத் தெரிவித்திருக்கிறார்கள். அந்த வகையில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில், எங்கள் கட்சியினுடைய அனைவரும் சேர்ந்து எடுத்த முடிவுக்கு இணங்க அவர்கள் அனைவரும் சேர்ந்து எனக்கு அளித்த அந்த அதிகாரத்தின் அடிப்படையில் இன்று முதல் தமிழக வாழ்வுரிமை கட்சி திமுக தலைமையிலான கூட்டணியிலிருந்து விலகுவது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கிறேன்” எனத் தெரிவித்தார். 

Source link