சரிவிலும் சமாளிக்க 6 பங்குகள் 'மோதிலால் ஓஸ்வால்' பரிந்துரைகள்

இந்திய பங்குச் சந்தை சரிவில் இருக்கும் இந்த சூழலில், பிரபல ஆய்வு நிறுவனமான ‘மோதிலால் ஓஸ்வால்’ முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய 6 பங்குகளை பரிந்துரைத்துள்ளது.

ஐ.சி.ஐ.சி.ஐ., புருடென்ஷியல் ஏ.எம்.சி.,

இலக்கு விலை : ரூ.3,500

தற்போதைய விலை : ரூ.2,849.90

இந்நிறுவனம், ஆக்டிவ் மியூச்சுவல் பண்டு பிரிவில் 13.50 சதவீதம் சந்தை பங்கீட்டுடன் முதலிடத்தில் உள்ளது. 2025 டிசம்பர் மாத நிலவரப்படி, கிட்டத்தட்ட 9.10 லட்சம் கோடி ரூபாய் சொத்துகளை நிர்வகித்து வருகிறது. வருவாய் வளர்ச்சி 15 சதவீதம் உயரும் எனவும், லாப வளர்ச்சி 16 சதவீதம் வரை உயரும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அதிகரித்து வரும் எஸ்.ஐ.பி., முதலீடுகள் மற்றும் மியூச்சுவல் பண்டு மீதான மக்களின் ஆர்வம், இந்த நிறுவனத்துக்கு பெரும் சாதகமாக அமையலாம்.

அப்போலோ ஹாஸ்பிட்டல்ஸ்

இலக்கு விலை : ரூ.9.015

தற்போதைய விலை : ரூ.7,547

கடந்த 3வது காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 17.20 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக மருத்துவ சேவை பிரிவில், அதிக நோயாளிகள் வருகை மற்றும் சிகிச்சை கட்டண உயர்வு காரணமாக, 14.30 சதவீத வளர்ச்சியை இந்நிறுவனம் பதிவு செய்துள்ளது. மருந்தகம் மற்றும் நோயறிதல் பிரிவுகளில் 20 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது. விரிவாக்கம் மற்றும் ஆன்லைன் பார்மசி வளர்ச்சி, புதிய மருத்துவமனை, படுக்கைகளை அதிகரித்து வருவது ஆகியவை இதன் பலம்.

சீமென்ஸ் எனர்ஜி

இலக்கு விலை : ரூ.3,600

தற்போதைய விலை : ரூ.2,629

மின் உற்பத்தி திறனை 60,000 மெகா வோல்ட் ஆம்பியர் அளவுக்கு உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான மிகப்பெரிய வாய்ப்பாகவும் அமையும். மேலும், இந்நிறுவனத்தின் வருவாய் ஆண்டுக்கு ஆண்டு 26 சதவீதம் உயர்ந்துள்ளது. நிகர லாபம் 57 சதவீதம் அதிகரித்துள்ளது. நிறுவனத்தின் ஆர்டர் புத்தக மதிப்பு கடந்த ஆண்டை விட 38 சதவீதம் அதிகரித்துள்ளது.

ஜெயின் ரிசோர்ஸ் ரீசைக்ளிங்

இலக்கு விலை : ரூ.520 தற்போதைய விலை : ரூ.462

இந்தியாவின் மிகப்பெரிய உலோக மறுசுழற்சி நிறுவனங்களில் ஒன்றான இது, ஒரே இடத்தில் பல்வேறு வகையான உலோகங்களை சுத்திகரிக்கும் வசதியை கொண்டுள்ளது. இதன் மொத்த உற்பத்தி திறன் 2.87 லட்சம் மெட்ரிக் டன். இந்நிறுவனம் சுமார் 120க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து பழைய உலோக கழிவுகளை இறக்குமதி செய்கிறது. மேலும், சுத்திகரிக்கப்பட்ட உலோகங்களை 20க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த வலுவான சப்ளை செயின் இந்நிறுவனத்தின் பலம். 2028க்குள் இந்த நிறுவனத்தின் வருவாய் வளர்ச்சி 36 சதவீதம், செயல்பாட்டு லாபம் 48 சதவீதம், நிகர லாபம் 56 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி.பி.ஓ., டெக்

இலக்கு விலை : ரூ.1,360

தற்போதைய விலை : ரூ.1,104.70

பயண துறையில் ‘பி2பி’ தளமாக இயங்கி வரும் இந்நிறுவனத்தின் மொத்த வர்த்தக மதிப்பு கிட்டத்தட்ட 30,800 கோடி ரூபாய். அதிக லாபம் தரும் ஹோட்டல் புக்கிங் மற்றும் கூடுதல் சேவைகள் மூலம் வருமானத்தை அதிகரிக்க இந்நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. இதனால் வரவிருக்கும் நிதி ஆண்டுகளில் இதன் வருமான வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனத்தில் இருக்கும், பல்வேறு நாடுகளின் கரன்சிகளில் பணம் செலுத்தும் வசதி மற்றும் அந்தந்த நாட்டு மொழிகளில் வாடிக்கையாளர் சேவை போன்ற வசதிகள் கூடுதல் பலம்.


பாரத் டைனமிக்ஸ்

இலக்கு விலை : ரூ.1,800

தற்போதைய விலை : ரூ.1,134

உதிரிபாகங்கள் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, கடந்த 3வது காலாண்டில், இந்நிறுவனத்தின் வருவாய் 32 சதவீதம் சரிந்துள்ளது. ‘ஆகாஷ் மற்றும் அஸ்த்ரா ஏவுகணைகள்’ தயாரிப்புக்கு வெளியிலிருந்து வாங்கப்படும் பொருட்களின் அளவு அதிகரித்ததால், இதன் லாப வரம்பு 4.60 சதவீதம் குறைந்து உள்ளது. தற்காலிக தொய்வு இருந்தாலும், நிறுவனத்தின் கைவசம் 25,500 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டர்கள் இருக்கின்றன. மேலும், நடப்பு மார்ச் மாதத்துக்குள் கூடுதலாக 4,000 — 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஆர்டர்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source link