'சர்க்கரை தொழிலுக்கு தீர்வு காண கூட்டுப்பண்ணை கைகொடுக்கும்' 'சிஸ்மா' தலைவர் யோசனை

கோவை: உலகிலேயே கரும்புக்கு அதிக விலை கொடுப்பது இந்தியாவில் தான். சர்க்கரை விலையும் இங்கு தான் குறைவு. இந்த முரண்தான், கரும்பு சாகுபடி மற்றும் சர்க்கரை ஆலை தொழிலில் பெரும் சிக்கலாக உள்ளது என, தென்னிந்திய சர்க்கரை ஆலைகள் சங்க (சிஸ்மா) வரதராஜன் தெரிவித்துள்ளார்.

கோவை, கரும்பு பெருக்க நிறுவனத்தில் நடந்த பயிலரங்கில் அவர் பேசியதாவது:

கரும்பு விவசாயிகள் டன்னுக்கு ரூ.4,000 கேட்கின்றனர். அப்போதுதான் அவர்களுக்கு கட்டுபடியாகும். ஆனால், ஆலைகளுக்கு அந்த அளவு வருவாய் வருவதில்லை. ஆலைகளின் வருவாயில் 70 முதல் 80 சதவீதம் வரை விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

உலகிலேயே கரும்புக்கு அதிக விலை இந்தியாவில் தான் வழங்கப்படுகிறது. அதேநேரம் சர்க்கரையின் விலை இந்தியாவில் தான் மிகக்குறைவு. இது பெரும் முரண்பாடு. சர்க்கரை விலை குறைந்தாலும் கரும்பு கொள்முதல் விலையை குறைக்க முடியாது.

விவசாயிகளுக்கு பாதிப்பு என்பது காரணம். இந்த முரண்தான் கரும்பு மற்றும் சர்க்கரை துறையின் பிரச்னை.

விவசாயிகள், ஆலை ஆகிய இருதரப்புக்குமான தீர்வு என்பது உற்பத்தி திறனை அதிகரிப்பதுதான். சிறு, சிறு விவசாய நிலங்களாக இருப்பது இயந்திரமயமாக்கலை தடுக்கிறது. இதற்கு, கூட்டுப்பண்ணை முறை தீர்வாக இருக்கும். அரசு, உழவர் உற்பத்தி மன்றங்களை (எப்.பி.ஓ.,) ஊக்குவிக்கிறது. ஆலைகள், கூட்டுப்பண்ணை முறையை கையிலெடுக்க விவசாயிகளை வழிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

உற்பத்தியாகும் சர்க்கரையில் 70 சதவீதம் இனிப்பு, பிஸ்கட், கூல் டிரிங்க் தயாரிப்பு நிறுவனங்களுக்கு செல்கிறது.
30 சதவீதம் தான் வீட்டு உபயோகம். அதிலும், 10 சதவீதம் பொது வினியோக திட்டம் வாயிலாக சென்றடைகிறது .
தமிழகத்தில் 280 லட்சம் டன் கரும்பு அரவையான நிலையில், தற்போது 83 முதல் 93 லட்சம் டன்தான் அரவை நடக்கிறது.

Source link