திருப்பூர்: ‘சர்வதேச அளவிலான பிராண்டுகளை உருவாக்க அரசு தரப்பு ஊக்குவிக்க வேண்டும்,’ என, டில்லியில் நடந்த சந்திப்பு நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
இந்தியாவின் ஆடை துறையின் உலகளாவிய பங்கை உயர்த்துவது குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி, டில்லியில் நடந்தது.
மத்திய ஜவுளித்துறை கூடுதல் செயலர் ரோஹித் கன்சல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பேராசிரியர் அசோக் குலாட்டி தலைமையில், முனைவர் சுலக் ஷனா ராவ், ஆயுஷி குப்தா, ரியா ஜெயின் ஆகியோரின், ஓராண்டு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டது.
இந்திய ஜவுளி மற்றும் ஆடை துறையின் முழுமையான வளர்ச்சியை, பருத்தி உற்பத்தியிலிருந்து, மதிப்பு கூட்டப்பட்ட ஆடையாக உலக சந்தை வரை விவரிக்கும் அறிக்கையாக இருந்தது.
கலந்துரையாடல் நிகழ்ச்சியில், சிறப்பு அழைப்பாளராக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் மற்றும் ‘சைமா’ பிரதிநிதிகள் பங்கேற்றனர். திருப்பூர் பின்னலாடை தொழிலின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காக, மத்திய அரசின் ஜவுளி கொள்கை தயாரிப்புக்கான முன்மொழிவுகளை அளிக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளனர்.
சர்வதேச அளவிலான பிராண்டுகளை உருவாக்க அரசு தரப்பு ஊக்குவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.
