சாதி பெயரைக் குறிப்பிட்ட விவகாரம்; அதிரடி முடிவெடுத்த பார்த்திபன்

இயக்குநர் மற்றும் நடிகரான பார்த்திபன் சமீபத்தில் அவர் நடித்த தெலுங்கு படமான ‘உஸ்தாத் பகத் சிங்’ பட விழாவில் தனது சாதி குறித்து பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையாகி கடும் விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்டிருந்தார். அதாவது வாய்தவறி அந்த வார்த்தையை பேசிவிட்டதாகவும் வேற எந்த உள் நோக்கமும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் இந்த விவகாரம் தன்னை ரொம்ப பாதித்தாகவும் அதன் காரணமாக சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழை வாங்க விண்ணப்பித்துள்ளதாகவும் பார்த்திபன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “உண்மையிலேயே என்னுடைய தந்தை இறப்பிற்கு பிறகு அல்லது என்னுடைய படங்கள் கோடிக்கணக்கில் நஷ்டமடைந்த பிறகும் இடிந்து போஉ உட்கார்ந்தது கிடையாது. ஆனால் கடந்த ஏழெட்டு நாட்கள் சமூக வலைதளத்தின் பாதிப்பினால், நான் சமூகத்தையும், சமூக வலைத்தளங்களை மதிப்பதினாலும் அது தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இத்தனை வருடங்களில் நான் என் பிறப்பு பற்றி பெருமையாய் நினைத்தது கிடையாது. அதை நான் அறவே வெறுப்பவன். என்னுடைய எல்லா படங்களிலும் சாதி தேவை இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக பேசி இருக்கிறேன். அதை பிரதிபலிக்கும் பாத்திரங்களை நிறைய தேர்ந்தெடுத்து நடித்திருக்கிறேன்.

நான் தமிழ் அழகாக பேசுவேன். என் தாய் மொழி தெலுங்காய் இருந்தாலும், நான் தமிழ் இவ்வளவு அழகாய் பேசுகிறேன் என்பது எனக்கு பெருமையாய் இருக்கலாம். சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட இதை சொல்லி இருந்தேன். வீட்டில் தெலுங்கு பேச வேண்டும் என  சொன்ன என் அப்பா கூட, நான் தமிழ் படத்தில் நடிக்கிறேன் என சொன்னதும், தமிழ் மொழியை சரியாக கற்றுக் கொள்ள வேண்டும் என்றார். என்னை இப்போது திட்டுபவர்கள் கூட இவ்வளவு அழகாய் தமிழ் பேசுபவர் சாதி பெருமை பேசுகிறாரே என்கிறார்கள், அது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது.

அது போல ஒருமுறை கூட என் வாழ்நாளில் சொன்னதே இல்லை. ஒரு முறை கூட சொல்லாதவன், ஒரு மேடையில் ஒரே ஒருமுறை சொல்லும்போது, அதற்கு பின்னால் காரணம் இருப்பதாக சொல்வதுதான் எனக்கு அவமானமாக இருக்கிறது. அந்த தெலுங்கு பட மேடையில் நான் தெலுங்குக்காரன் என சொல்வதால் எனக்கு என்ன லாபம்? சிலபேருக்கு அப்படி பெருமை இருக்கலாம், எனக்கு அப்படி இல்லை. நான் அன்று மிகவும் டென்ஷனாக இருந்தேன். நான் தமிழ் பேசும் மேடையில் எனக்கு எந்த ப்ரிபரேஷனும் தேவை இல்லை. ஆனால் தெலுங்கில் பேச வேண்டும், முன்னால் துணை முதலமைச்சர் பவன் கல்யாண் உட்பட முக்கியமான ஆளுமைகள் இருக்கிறார்கள். நம் வார்த்தை எதுவும் தவறாக வந்துவிடக்கூடாது என அதில் கவனமாக இருந்தேன். பேப்பரில் கூட எழுதி எடுத்துக் கொண்டு போனேன்.

`என் தாய் மொழி தெலுங்காக இருந்தாலும், எனக்கு தெலுங்கு சரியாக பேச வராது’ என சொல்லித்தான் பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என நினைத்தேன். அப்போது பின்னால் இருந்த ஒருவர் என்னிடம் நீங்கள் நாயுடு பையனா எனக் கேட்டார். ஆம் என்று கூறினேன். தெலுங்கு என சொல்வதற்கு பதில், நாயுடு என்பது மண்டையில் பதிந்து போனது. எனவே மேடையில் பேசும்போது எனக்கு அந்த வார்த்தை ஒருமுறைக்கு இருமுறையாக வந்துவிட்டது. எல்லாமே பதட்டம் தான். அது இவ்வளவு பெரிய எதிர்வினையை ஏற்படுத்தும் என நினைக்கவே இல்லை. அதற்கு மனப்பூர்வ மன்னிப்பு தெரிவித்தும் யாரும் விடுவதாய் இல்லை. உண்மையிலேயே எனக்கு சாதி வெறி இருந்தால், நான் அப்படியே கமுக்கமாக இருந்திருப்பேன். ஆனால் அது எனக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. ஏனென்றால் நான் அப்படி இல்லை. சாதி இல்லை என சொல்வதில் தான் எனக்கு விருப்பம். 

கடைசியாக வெளியிட்ட அறிக்கையில் என்னுடைய பிறப்பு சான்றிதழை மாற்ற முடியுமா? எனக் கேட்டேன். பின்னர் உண்மையிலேயே எனக்கு சாதியையும் மதமும் இல்லை என்பது என் விருப்பமாக இருக்கையில் அதை மாற்ற ஏன் நான் முயற்சிக்க கூடாது என யோசித்தேன். அதற்காக நான் இரண்டு நீதி அரசர்கள் உட்பட பல பேரிடம் பேசி ஒரு விஷயத்தை கண்டுபிடித்தேன். 1973ல் ஒரு அரசு ஆணையை நிறைவேற்றி இருக்கிறார்கள். சாதி இல்லை என்ற சான்றிதழ் கொடுக்கலாம், குறிப்பாக பள்ளியில். இது பள்ளிக்கு தான், என்னை போன்ற ஒரு அடல்ட் இந்த சான்றிதழை வாங்கியதில்லை. 2022ல் கூட ஒரு தம்பதி தங்கள் குழந்தைக்கு இந்த சான்றிதழ் பெற்றுள்ளனர். இதெல்லாம் எனக்கு ஒரு தெம்பை கொடுத்தது. பின்னர் நான் ஒரு மனுவை தயார் செய்து அரசு அலுவலகத்துக்கு போனேன். இது குறித்து அதிகாரிடளிடம் கேட்ட போது, அரசு ஆனை பிறப்பித்தால் தான் இந்த சான்றிதழ் பெற முடியும் என்றார்கள். இப்போது தேர்தல் சமயம் என்பதால் அது நடக்காது என்றார்கள் தேர்தல் முடிந்த பிறகு பெற்றுக்கொள்ளலாம் என்றனர். அது நிம்மதியாக இருந்தாலும் ஒரு வாக்குமூலத்தை பதிவு செய்ய அறிவுரை வழங்கினார்கள். 

அதில் ‘எந்தவிதமான அழுத்தமும், கட்டாயமும் இல்லாமல் என் சொந்த விருப்பத்தினால் நான் எனது ஜாதி அடையாளத்தையும் மத அடையாளத்தையும் முற்றிலும் துறக்க முடிவு செய்துள்ளேன். இச்சத்தியப்பிரமாணப் பத்திரம் செய்யப்பட்ட நாளிலிருந்து நான் எந்த ஜாதிக்கும் அல்லது எந்த மதத்திற்கும் சேர்ந்தவன் அல்ல. ஜாதி அல்லது மதத்தின் அடிப்படையில் அரசாங்கம் வழங்கும் எந்தவொரு சலுகை, ஒதுக்கீடு அல்லது நன்மைகளை நான் கோரமாட்டேன் என்று அறிவிக்கிறேன். எனது நிலையை அரசாங்க பதிவுகளில், ஜாதி இல்லை – மதம் இல்லை என்று பதிவு செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணிவுடன் கோருகிறேன்.

இச்சத்தியப்பிரமாணப் பத்திரத்தில் கூறப்பட்டுள்ள அனைத்தும் என் அறிவின்படியும் நம்பிக்கையின்படியும் உண்மையானவை என்பதை உறுதிப்படுத்துகிறேன்’ எனக் குறிப்பிட்டு கையெழுத்து போடிருக்கிறேன். பத்திரிக்கைகளிலும் விளம்பரம் கொடுத்திருக்கிறேன். இதன் பிறகு அரசாணை வர வேண்டும். அப்படி வந்தது என்றால், முதன் முதலில் திரையுலகில் இந்த சான்றிதழை நான் தான் வாங்குவேன் என்ற பெருமை எனக்கு இருக்கிறது. உண்மையில் இதுதான் பெருமை. அதாவது ஜாதி இல்லை என சொல்வதுதான் எனக்கு பெருமையே தவிற மற்றபடி இந்த சாதிதான் நான் என சொல்வதில் எனக்கு பெருமை இல்லை. அதை ரொம்ப உறுதியோடு சொல்கிறேன்.

இதை நான் மட்டும் இல்லை, என்னுடைய குழந்தைகள், என்னை சார்ந்தவர்கள், எனது அறக்கட்டளை ஆகியவைகளில் அறிவுறுத்தியிருக்கேன். அதுமட்டுமல்லாமல் மூன்று மாதத்திற்கு நான் நடத்தும் இரத்த தானத்தில், இந்த முறை இதற்கான ஒரு விழிப்புணர்சியையும் ஏற்படுத்த நினைக்கிறேன். இது தான் என்னுடைய நோக்கம். இது எல்லாமே இந்த பிரச்சனைக்கு பிறகு நானாக தெளிவடைந்தது. நாம எல்லாருமே மனித ஜாதி, நமக்கு எல்லாரும் பொதுவான மதமும் மனிதநேயம். எனக்கு தெர்ந்தது எல்லாமே சினிமா மட்டும்தான். ஒன்றே குலம் ஒருவனே தெய்வம் மாதிரி, ஒன்றே சினிமா ஒருவனே ரசிகன். இதுதான் என் கொள்கை, கோட்பாடு, தத்துவம் எல்லாமே” என்றார். 

Source link