மதுரை: கொரோனா ஊரடங்கு காலத்தில், துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கி, கொலை செய்த வழக்கில், குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட, 9 போலீசாருக்கு தண்டனையை ஏப்., 2ல் மதுரை மாவட்ட நீதிமன்றம் அறிவிக்க உள்ளது.
மார்ச், 23ல் இந்நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் பிறப்பித்த உத்தரவில், ‘ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய் வழக்கு பதிந்து, சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கியுள்ளனர்.
இருவரும் கொலை செய்யப்பட்டதில், இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட, 9 போலீசாரும் குற்றவாளிகள். அவர்களுக்கு, மார்ச் 30ல் தண்டனை அறிவிக்கப்படும்.
எத்தகைய தண்டனை விதிப்பது என்பது குறித்த நிலைப்பாட்டை மத்திய, மாநில அரசுகள் தரப்பில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும்,’ என்றார்.
நேற்று, நீதிபதி முத்துக்குமரன் விசாரித்தார். ஸ்ரீதர் உட்பட, 9 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களின் உடல், மனநலம் மருத்துவ பரிசோதனை சான்றை சி.பி.ஐ., சமர்ப்பித்தது. மத்திய, மாநில அரசுகள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது.
நீதிபதி, ‘துாக்கு தண்டனை அல்லது சிறிய தண்டனை தான் விதிக்க முடியும். இதில், அரசுகளின் நிலைப்பாட்டை தெரிவிப்பதில் தாமதம் ஏன்? அறிக்கை தாக்கல் செய்யாதது, நீதிமன்ற உத்தரவை மதிக்காததை வெளிப் படுத்துகிறது.
‘இதனால் நீதிமன்றத்தின் நேரம் வீணாகிறது. குற்றச்சாட்டு தீவிரமானது. அவகாசம் அளிக்கப்படுகிறது. தண்டனை ஏப்., 2ல் அறிவிக்கப்படும்’ என, உத்தர விட்டார்.
