மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் போலீஸ் காவலில் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் உட்பட 9 போலீசாரும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளனர். அவர்களுக்கு மதுரை சிறை நிர்வாகம் சார்பில் தண்டனை கைதிக்கான சீருடை வழங்கப்பட்டது.
துாத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொரோனா ஊரடங்கில் விதிமுறைகளை மீறி கடை திறந்ததாக கூறி போலீஸ் ஸ்டேஷனிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். போலீஸ் காவலில் சித்ரவதை செய்யப்பட்ட நிலையில் இறந்தனர். இதை கொலை வழக்காக பதிவு செய்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.,க்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், சிறப்பு எஸ்.ஐ., பால்துரை, ஏட்டுகள் முருகன், முத்துராஜ், தாமஸ் பிரான்சிஸ், போலீசார் செல்லதுரை, வெயிலுமுத்து ஆகியோர் 2020ல் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பால்துரை கொரோனா தொற்றால் இறந்துவிட, மற்ற 9 பேர் மீதான விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.
நேற்று 9 பேருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. காலையில் விசாரணை கைதிகளாக மதுரை சிறையில் இருந்து புறப்பட்டவர்கள், மாலையில் தண்டனை கைதிகளாக திரும்பினர்.பாதுகாப்பு காரணங்களுக்காக சில ஆண்டுகளாகவே சிறையில் தண்டனை ‘பிளாக்’கில் அடைக்கப்பட்டிருந்தனர். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரும், எஸ்.ஐ., ரகுகணேஷ் மட்டும் தனி ‘செல்’லில் உள்ளனர். மற்றவர்கள் அருகில் உள்ள தனி ‘செல்’லில் உள்ளனர். இவர்களில் யாரும் தற்கொலைக்கு முயற்சிக்கக்கூடாது என்பதற்காக 24 மணி நேரமும் அவர்களை சிறை காவலர்கள் கண்காணித்து வருகின்றனர்.
மரண தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 9 பேரும் மேல்முறையீடு செய்ய உள்ளனர். தண்டனை கைதிகள் என்பதால் இவர்களுக்கு சிறை நிர்வாகம் சார்பில் வெள்ளை சீருடைக்கான துணி வழங்கப்பட்டது. அதை சிறையில் உள்ள டெய்லரிங் பிரிவில் கொடுத்து தைத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
