தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு அமலில் இருந்தபோது ஜூன் 19ஆம் தேதி கடையை மூடாததால் செல்போன் கடை வைத்திருந்த தந்தை மற்றும் மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது அவர்கள் இருவர் மீது காவல் நிலையத்தில் வைத்து போலீசார் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதனையடுத்து கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அடுத்தடுத்து இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் அப்போதைய காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் உள்ளிட்ட ஒன்பது காவலர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்ட நிலையில் ஏ1 குற்றவாளியாகக் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் சேர்க்கப்பட்டு 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்படி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணையானது நடைபெற்று வந்தது. இதில், 9 போலீசாரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு தொடர்பான தண்டனை விவரங்களை நீதிபதி முத்துக்குமரன் நேற்று (06.04.2026) அறிவித்தார். அதில், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், சாமிதுரை, முத்துராஜ், செல்லத்துரை, வெயிலுமுத்து மற்றும் தாமஸ் ஆகிய 9 போலீசாருக்கும் இரட்டை மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், குற்றவாளிக்கு மரண தண்டனையுடன் கூடிய அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் சாத்தான்குளம் வழக்கில் 9 காவலர்களுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு அ.தி.மு.க. வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது. எடப்பாடி பழனிசாமி இந்த வழக்கை சி.பி.ஐ. (CBI) விசாரணைக்கு மாற்றியதன் விளைவாக இன்றைய தினம் ஒரு நியாயமான தீர்ப்பு கிடைத்துள்ளது.
காவல் மரணங்களை அதிமுக ஒருபோதும் ஆதரித்தது இல்லை என்பதற்கு, பாரபட்சமற்ற விசாரணைக்கு இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியதே சாட்சி. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், எந்த இடத்தில் இருந்தாலும், சட்டத்தின் முறையில் தண்டனை கிடைக்கும் என்பதை உறுதி செய்திருக்கிறது அதிமுக அரசு. தி.மு.க.வைப் போல் சி.பி.ஐ விசாரணைக்குப் பயந்து நீதிமன்றம் சென்ற வாதாடும் அரசு அல்ல அதிமுக அரசு. திமுக ஆட்சியில் நடைபெற்ற 30க்கும் மேற்பட்ட காவல் மரணங்களுக்கும் இதேபோல் உரிய நீதியை விரைவில் அமையப்போகும் எடப்படி பழனிசாமியின் அதிமுக அரசு நிலைநாட்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
