திருநெல்வேலி: திருநெல்வேலி மக்களுடன் எனக்கு நீண்டநாள் உறவு உள்ளது. அ.தி.மு.க., விருப்பத்திற்கிணங்க இம்முறை சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறேன் என தமிழக க பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
திருநெல்வேலியில் நிருபர்களிடம் நயினார் நாகேந்திரன் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணியை பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இபிஎஸ் இணைந்து வலுவாக அமைத்துள்ளனர். ஆளுங்கட்சிக்கு எதிராக மக்களிடம் கடும் அதிருப்தி நிலவுகிறது.
இந்தத் தேர்தலில் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறும். திருநெல்வேலி மக்களுடன் எனக்கு நீண்டநாள் உறவு உள்ளது. அ.தி.மு.க., விருப்பத்திற்கிணங்க இம்முறை சாத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறேன்.
வாக்குறுதிகள்
எங்கு போட்டியிட்டாலும், திருநெல்வேலி மீது எனது கவனம் தொடர்ந்து இருக்கும். திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து, சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
மின் கட்டணம், சொத்து வரி உயர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் வழங்காமல் ஏமாற்றப்பட்டுள்ளது. முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தி.மு.க., அரசு நீதிமன்றம் சென்றது. இதனால் பல சமூகத்தைச் சேர்ந்த ஏழை மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஏப்ரல் 4, 6ல்!
மதச்சார்பின்மை குறித்து பேசும் தி.மு.க., அரசு அனைத்து சமுதாயங்களையும் சமமாக பார்க்கவில்லை. ஆனால் பிரதமர் மோடி அனைத்து மதங்களுக்கும் சமமாக அணுகுகிறார். உலகளவில் இந்தியாவின் மரியாதை உயர்ந்துள்ளது. பிரதமர் மோடியின் செல்வாக்கு காரணமாகவே பல்வேறு சவால்களையும் இந்தியா தாண்டி வருகிறது.
தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் சென்னை வரவுள்ளார். அதன் பின்னர் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும். ஏப்ரல் 4 மற்றும் 6 தேதிகளில் வேட்புமனுத் தாக்கல் நடைபெறும். கூட்டணியில் மக்களின் விருப்பமே முக்கியம். இவ்வாறு நயினார் நாகேந்திரன் கூறினார்.
