விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்து பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள மடத்துபட்டியில் இயங்கி வரும் ‘எக்ஸெல்’ என்ற தனியார் பட்டாசு ஆலையில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்த விபத்து காலை சுமார் எட்டு முப்பது மணிக்கு நடந்ததாக கூறப்படும் நிலையில் அந்த நேரத்தில் ஆலையில் தொழிலாளர்கள் அதிகமாக இல்லாதது தெரியவந்துள்ளது.
உடனடியாக தகவலறிந்து அங்கு வந்த வெம்பக்கோட்டை தீயணைப்புத் துறையினர் மற்றும் சிவகாசி தீயணைப்புத் துறையினர் உள்ளே புகுந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் பாண்டி என்ற தொழிலாளி காயமடைந்து சிவகாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேறு ஏதேனும் தொழிலாளர்கள் சிக்கி உள்ளனரா என்பது குறித்து தீயணைப்புத் துறையினர் தேடிய நிலையில், இருவர் படுகாயத்துடன் கிடந்துள்ளனர். உடனடியாக அங்கு வந்த வெப்பக்கோட்டை காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த பகுதியில் புகை சூழ்ந்துள்ளது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
