மும்பை: ‘டி-20’ உலக கோப்பை பைனலுக்கு இந்திய அணி ஜோராக முன்னேறியது. நேற்று நடந்த விறுவிறுப்பான அரையிறுதியில் 7 ரன் வித்தியாசத்தில் வென்றது. 89 ரன் விளாசிய சாம்சன், வெற்றிக்கு கைகொடுத்தார். இங்கிலாந்து அணி வெளியேறியது.
இந்தியா, இலங்கையில் 10வது ‘டி-20’ உலக கோப்பை தொடர் நடக்கிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இரண்டாவது அரையிறுதியில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, இங்கிலாந்து மோதின. இந்திய அணியில் மாற்றம் செய்யப்படவில்லை. இங்கிலாந்து அணியில் ரேஹன் அஹமது நீக்கப்பட்டு, ஜேமி ஓவர்டன் இடம் பெற்றார். ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
அபிஷேக் ஏமாற்றம்: இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் மீண்டும் அதிரடி துவக்கம் தந்தார். ஆர்ச்சர் வீசிய முதல் ஓவரில் வரிசையாக ஒரு பவுண்டரி, சிக்சர் அடித்தார். ‘ஸ்பின்னர்’ வில் ஜாக்ஸ் ஓவரில் 2 பவுண்டரி அடித்த அபிஷேக் (9), சிக்சருக்கு ஆசைப்பட்டு விக்கெட்டை பறிகொடுத்தார். ஆர்ச்சர் பந்தை (2.2வது ஓவர்) சாம்சன் ‘மிட்-ஆன்’ திசையில் அடிக்க, கைக்கு நேராக வந்த சுலப ‘கேட்ச்சை’ ஹாரி புரூக் நழுவவிட, 15 ரன்னில் கண்டம் தப்பினார்.
26 பந்தில் அரைசதம்: பின் சாம்சன், இஷான் கிஷான் சேர்ந்து இங்கிலாந்து பந்துவீச்சை துவம்சம் செய்தனர். 2வது விக்கெட்டுக்கு 45 பந்தில் 97 ரன் சேர்த்தனர். இருவரும் பவுண்டரி, சிக்சர்களாக விளாச, ‘பவர் பிளே’ (முதல் ஓவர்) முடிவில் இந்தியா 67/1 ரன் குவித்தது. டாசன் பந்தை (7.4) சிக்சருக்கு அனுப்பிய சாம்சன், 26 பந்தில் இன்னொரு அரைசதம் கடந்தார். இந்தியா 8.3 ஓவரில் 100/1 ரன்னை எட்டியது. அடில் ரஷித் ‘சுழலில்’ இஷான் (39 ரன், 18 பந்து, 4×4, 2×6) சிக்கினார். நான்காவது இடத்தில் ஷிவம் துபே களமிறக்கப்பட்டார்.
ஆர்ச்சர் ஓவரில் சாம்சன் 2 இமாலய சிக்சர் அடிக்க, இந்திய ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். ஜாக்ஸ் வலையில் சிக்கிய சாம்சன் (89 ரன், 42 பந்து, 8X4, 7X6) சதம் எட்ட தவறினார். ரஷித் பந்தில் கேப்டன் சூர்யகுமார் (11) வெளியேறினார்.
பாண்ட்யா விளாசல்: கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்ட்யா மிரட்டினார். ஷிவம் துபே (43) ரன் அவுட்டானார். ஆர்ச்சர் ஓவரில் 3 சிக்சர் அடித்த திலக் வர்மா, 21 ரன் விளாசினார். வில் ஜாக்ஸ் ஓவரில் வரிசையாக 2 சிக்சர் பறக்க விட்ட பாண்ட்யாவும் (27) ரன் அவுட்டானார். கடைசி 5 ஓவரில் 76 ரன் எடுக்கப்பட்டன. இந்திய அணி 20 ஓவரில் 253/7 ரன் குவித்தது.
பெத்தல் சதம்: கடின இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி, இந்திய பந்துவீச்சில் அதிர்ந்தது. பில் சால்ட் (5) நிலைக்கவில்லை. பும்ரா பந்தில் அக்சர் படேல் நீண்ட துாரம் ஓடி பிடித்த கலக்கல் ‘கேட்ச்சில்’ கேப்டன் ஹாரி புரூக் (7) அவுட்டானார். வருண் சக்ரவர்த்தி ‘சுழலில்’ பட்லர் (25) போல்டானார். வில் ஜாக்ஸ், 35 ரன் எடுத்தார். தனிநபராக போராடிய ஜேக்கப் பெத்தல், சதம் அடித்து மிரட்டினார். சாம் கர்ரான். 18 ரன் எடுத்தார்.
கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 30 ரன் தேவைப்பட்டன. ஷிவம் துபே பந்துவீசினார். முதல் பந்தில் பெத்தல் (105 ரன், 48 பந்து, 8×4, 7×6) ரன் அவுட்டாக நிம்மதி பிறந்தது. அடுத்த 2 பந்தில் 2 ரன் தான் எடுக்கப்பட்டன. தொடர்ந்து ஆர்ச்சர் 3 சிக்சர் அடித்தும் பலன் கிடைக்கவில்லை. இங்கிலாந்து அணி 20 ஓவரில் 246/7 ரன் மட்டும் எடுத்து தோல்வி அடைந்து, வெளியேறியது.
ஆட்டநாயகன் விருதை சாம்சன் வென்றார்.
நான்காவது முறை
இங்கிலாந்தை வீழ்த்திய இந்திய அணி, ‘டி-20’ உலக கோப்பை வரலாற்றில் 4வது முறையாக (2007, 2014, 2024, 2026) பைனலுக்கு முன்னேறியது. கடந்த 2007, 2024ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா, 2014ல் 2வது இடம் பிடித்தது.
நியூசி.,யுடன் மோதல்
ஆமதாபாத்தில், மார்ச் 8ல் நடக்கவுள்ள ‘டி-20’ உலக கோப்பை பைனலில் இந்திய அணி, நியூசிலாந்தை சந்திக்கிறது. பைனலில் இவ்விரு அணிகள் முதன்முறையாக மோதுகின்றன.
ரோகித்தை முந்தினார்
‘டி-20’ உலக கோப்பை வரலாற்றில், ஒரு சீசனில் அதிக சிக்சர் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மா (15 சிக்சர், 2024), ஷிவம் துபே (15 சிக்சர், 2026) ஆகியோரை முந்தினார் சஞ்சு சாம்சன் (16 சிக்சர், 2026).
ஆறாவது முறை
ஒட்டுமொத்த ‘டி-20’ அரங்கில், அதிக முறை ஒரு இன்னிங்சில் 250+ ரன் குவித்த அணிகளுக்கான பட்டியலில் முதலிடம் பிடித்தது இந்தியா (6 முறை). அடுத்த இடத்தில் ஐதராபாத் (5 முறை) உள்ளது. வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, சர்ரே அணிகள் தலா 3 முறை இம்மைல்கல்லை எட்டின.
சிக்சர் மழை
‘டி-20’ உலக கோப்பை அரங்கில், ஒரு இன்னிங்சில் அதிக சிக்சர் விளாசிய அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை நெதர்லாந்து (எதிர்: அயர்லாந்து, 2014), வெஸ்ட் இண்டீஸ் (எதிர்: ஜிம்பாப்வே, 2026) அணிகளுடன் பகிர்ந்து கொண்டது இந்தியா. மூன்று அணிகளும் தலா 19 சிக்சர் விளாசின.
* ‘டி-20’ உலக கோப்பையில் ஒரு சீசனில் அதிக சிக்சர் பறக்கவிட்ட அணிகளுக்கான வரிசையில் முதலிடம் பிடித்தது இந்தியா (88 சிக்சர், 2026). அடுத்த இரு இடங்களில் வெஸ்ட் இண்டீஸ் (76 சிக்சர், 2026), தென் ஆப்ரிக்கா (72 சிக்சர், 2026) அணிகள் உள்ளன.
நான்காவது அதிகபட்சம்
‘டி-20’ உலக கோப்பை அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணிகளுக்கான பட்டியலில் 4வது இடம் பிடித்தது இந்தியா (253/7). முதல் மூன்று இடங்களில் இலங்கை (260/6, எதிர்: கென்யா, 2007), இந்தியா (256/4, எதிர்: ஜிம்பாப்வே, 2026), வெஸ்ட் இண்டீஸ் (254/6, எதிர்: ஜிம்பாப்வே, 2026) அணிகள் உள்ளன.
* தவிர இது, ‘டி-20’ உலக கோப்பை ‘நாக்-அவுட்’ போட்டியில் பதிவான அதிகபட்ச ஸ்கோரானது. இதற்கு முன், 2012ல் கொழும்புவில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 205/4 ரன் எடுத்திருந்தது.
தோனி வழியில்
‘டி-20’ உலக கோப்பை அரங்கில் ஒரு சீசனில் மூன்று முறை ‘ரன்-அவுட்’ ஆன வீரர்கள் வரிசையில் முதலிடத்தை இந்தியாவின் தோனியுடன் (2007) பகிர்ந்து கொண்டார் ஷிவம் துபே.
8.3 ஓவரில் 100 ரன்
‘டி-20’ உலக கோப்பை ‘நாக்-அவுட்’ போட்டியில் 100 ரன்னை (8.3 ஓவர்) அதிவேகமாக எட்டிய அணிகள் பட்டியலில் இந்தியா இரண்டாவது பிடித்தது. முதலிடத்தில் நியூசிலாந்து (7.5 ஓவர், எதிர், தென் ஆப்ரிக்கா, 2026, கோல்கட்டா) உள்ளது.
காஸ்ட்லி ‘கேட்ச்’
சாம்சன் 7 பந்தில் 15 ரன் எடுத்த நிலையில், கொடுத்த ‘கேட்ச்சை’ ஹாரி புரூக் கோட்டைவிட்டார். இதை பயன்படுத்தி கூடுதலாக 74 ரன் (35 பந்தில்) எடுத்தார். மொத்தம் 42 பந்தில் 89 ரன் விளாசினார்.
