பார்சிலோனா: ஸ்பெயினின் பார்சிலோனாவில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கிளப் கால்பந்து ‘ரவுண்டு-16’ சுற்றுக்கான 2வது போட்டியில் நியூகேசில் யுனைடெட் (இங்கிலாந்து), பார்சிலோனா (ஸ்பெயின்) அணிகள் மோதின. கோல் மழை பொழிந்த பார்சிலோனா 7-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகள் மோதிய முதல் போட்டி 1-1 என ‘டிரா’ ஆனது. முடிவில் பார்சிலோனா அணி 8-3 (1-1, 7-2) என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. காலிறுதியில் (ஏப். 8, 14) பார்சிலோனா அணி, ஸ்பெயினின் அத்லெடிகோ மாட்ரிட் அணியை சந்திக்கிறது.
யூத் விளையாட்டு
வல்லெட்டா: மால்டாவில், அடுத்த ஆண்டு (அக். 29 – நவ. 4) காமன்வெல்த் யூத் விளையாட்டு 8வது சீசன் நடக்கவுள்ளது. இதில் 74 நாடுகளை சேர்ந்த 1200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் (14-18 வயது) பங்கேற்கின்றனர். நீச்சல், பாரா நீச்சல், தடகளம், பாரா தடகளம், ஸ்குவாஷ், டிரையத்லான் உள்ளிட்ட 8 வகையான விளையாட்டு போட்டிகள் நடக்கவுள்ளன. வாட்டர் போலோ, பாய்மரப்படகு போட்டிகள் அறிமுகமாகின்றன.
பிலிப்பைன்ஸ் தகுதி
கோல்டு கோஸ்ட்: ஆஸ்திரேலியாவில், பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து 21வது சீசன் நடக்கிறது. கோல்டு கோஸ்ட் நகரில் நடந்த ‘பிளே-ஆப்’ போட்டியில் உஸ்பெகிஸ்தான், பிலிப்பைன்ஸ் அணிகள் மோதின. ஏஞ்சலா பியர்டு, ஜாக்லின் சாவிக்கி தலா ஒரு கோல் அடித்து கைகொடுக்க பிலிப்பைன்ஸ் அணி 2-0 என வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு (ஜூன் 24 – ஜூலை 25) பிரேசிலில் நடக்கவுள்ள உலக கோப்பை கால்பந்து தொடருக்கு பிலிப்பைன்ஸ் அணி தகுதி பெற்றது.
எக்ஸ்டிராஸ்
* இந்துாரில் நடக்கும் சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பாலமுருகன், சித்தேஷ் பாண்டே ஜோடி 3-1 (6-11, 11-4, 11-4, 13-11) என, மேற்கு வங்கத்தின் அங்கூர் பட்டாசார்ஜி, ஷங்கதிப் தாஸ் ஜோடியை வீழ்த்தியது.
* உலக பிரிமியர் ஸ்குவாஷ் முதல் சீசன் இந்த ஆண்டு நடக்கவுள்ளது. இதன் விளையாட்டு ஆணையராக, இந்திய வீரர் சவுரவ் கோசால் நியமிக்கப்பட்டுள்ளார்.
* மிசோரமில் நடந்த ‘ஐ-லீக்’ கால்பந்து போட்டியில் ஷில்லாங் லஜோங் அணி 2-1 என்ற கோல் கணக்கில் சான்மாரி எப்.சி., அணியை வீழ்த்தியது.
* பிரிமியர் கிரிக்கெட் 19வது சீசனுக்கான சென்னை அணியில் இருந்து, ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் நாதன் எல்லிஸ் 31, தொடையின் பின்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் விலகினார்.
* டில்லியில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து போட்டியில் டில்லி, ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.
