ஆதித்யா தார் – ரன்வீர் சிங் கூட்டணியில் ‘துரந்தர் 2’ படம் வெளியாகி வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக தெய்வத்திருமகள் படக் குழந்தை நட்சத்திரம் சாரா அர்ஜூன் நடித்துள்ளார். கடந்த ஆண்டு முதல் பாகம் வெளியான போது பட விளம்பர நிகழ்வில் அவர் மீது படத்தில் நடித்த ராகேஷ் பேடி முத்தம் கொடுத்தது சர்ச்சையானது.
அதாவது மும்பையில் நடந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் சாரா ஆர்ஜூன் தோளில் அவருக்கு தந்தையாக படத்தில் நடித்த ராகேஷ் பேடி என்பவர் முத்தம் கொடுத்திருந்தார். அது பலராலும் மகள் போல் இருக்கும் ஒருவரிடம் பொதுவெளியில் இப்படி முத்தம் கொடுப்பதா என விமர்சனங்களை வைத்தனர். அதற்கு ராகேஷ் பேடி, சாரா அர்ஜூன் தன் மகள் போல் என்றும் அந்த தந்தையின் அன்பை வெளிப்படுத்தியதாகவே முத்தம் கொடுத்தேன் எனவும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த விவகாரம் குறித்து தற்போது ஒரு பாட்காஸ்ட் நிகழ்ச்சியில் மீண்டும் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “படப்பிடிப்பு தளத்தில் சாரா அர்ஜூன் வரும் போதெல்லாம், நான் அவளைக் கட்டிப்பிடித்து, நெற்றியில் முத்தமிடுவேன். ஒரு சொந்த மகளைப் போலவே, ‘கவலைப்பட வேண்டாம். நாம் இருவரும் இணைந்து சிறப்பாக நடிப்போம்’ என சொல்வேன். ஆனால், அதே பாணியில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் அவளை நான் வரவேற்றது, தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. மக்கள் பல்வேறு விதமாக எழுத தொடங்கிவிட்டனர். ஆனால் சிலர் எனக்கு ஆதரவாகவும் எழுதினர். உண்மையைச் சொல்லப்போனால், மக்களுக்குப் பேசுவதற்கு எதாவது ஒரு காரணம் வேண்டும். எதையாவது சொல்லிக்கொண்டு பேசுவதுதான் அவர்களின் வேலை” என்றார்.
