காங்கிரஸையும் கோஷ்டி மோதலையும் பிரிக்கவே முடியாது. திமுகவிடம் தொகுதிகளை இறுதி செய்ய வேண்டி டெல்லிக்கு அடிக்கடி பறந்து வந்த செல்வப்பெருந்தகை இப்போது வேட்பாளர் பட்டியலை இறுதி செய்ய டெல்லிக்கு பறந்தபடி இருக்கிறார். இருக்கிற 28 சீட்டுகளை பங்கு போட்டுக் கொள்ள சத்யமூர்த்தி பவனை ரெண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர் கதர் சட்டையினர்.
ஏப்ரல் 1 ஆம் தேதியான நேற்று இப்படியாக ஒரு 3 கோஷ்டிகள் எம்.எல்.ஏ சீட் வேண்டி சத்யமூர்த்தி பவனை முற்றுகையிட்டிருந்தனர். தமிழ்நாடு சேவாதள காங்கிரஸ் தலைவர் குங்பூ விஜயன் சத்யமூர்த்தி பவனே நடுநடுங்கும் அளவுக்கு 25 பேரோடு வந்து சீட்டு கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தார். அதிலும், மிக விவரமாக ‘அண்ணனுக்கு இந்த வெயில்னா ஒத்துக்காதுய்யா…’ என கைக்காசை போட்டு ஒரு சாமியானாவை கட்டி நிழலில் இளைப்பாறிக் கொண்டே ஆர்ப்பாட்டம் நடத்தியிருந்தார்.
ஆர்ப்பாட்டத்தின் வீரியம் பத்தவில்லை என நினைத்தாரோ தெரியவில்லை, திடீரென லெட்சுமி என்கிற பெண் டீசல் கேனை தூக்கிக் கொண்டு தீக்குளிக்கப் போவதாக ஓடினார். பதறிப்போன குங்பூ க்ரூப் ‘சீட்டு கூட வாங்கிடலாம். விக்குற விலைக்கு டீசல்தான் வாங்க முடியாது…’ முணுமுணுத்துக் கொண்டே ‘தீக்கு உன்னை இரையாக்கிக் கொள்ளாதே வீர மகளே..’ என என்னவெல்லாமோ சொல்லி ஆசுவாசப்படுத்தி அந்தப் பெண்ணை அழைத்து வந்தனர். வெயில் கொஞ்சம் உக்கிரமாக பந்தலை மீறியும் அனல் அடித்தது. ‘இதுக்கு மேல பாடி தாங்காதுப்பா…’ என குங்பூ க்ரூப் கடையை காலி செய்தது.

அடுத்ததாக மகிளா காங்கிரஸ் மாநிலத் தலைவர் ஹசினாவுக்கு சீட் வேண்டுமென ஒரு மகளிர் க்ரூப் வந்தது. சரியாக சத்யமூர்த்தி பவன் என்கிற பெயர் தெரிகிற மாதிரி ப்ரேம் வைத்து போட்டோ எடுத்துவிட்டு, ‘வேண்டும் வேண்டும் ஹசினாவுக்கு சீட் வேண்டும்…’ என எழுதிக் கொடுத்த கோஷத்தை படித்துவிட்டு பொடிநடையாக கிளம்பினர்.
மதியத்துக்கு மேல் இன்னொரு க்ரூப் வந்தது. அந்த கோஷ்டி செய்ததுதான் இன்னும் ரகளையாக இருந்தது. சத்யமூர்த்தி பவனில் இருந்த அத்தனை தலைகளும் மதிய சாப்பாட்டுக்காக வெளியே போயிருந்த நேரம், அந்த இடமே மந்தமாக இருந்தது.
யாரும் இல்லாத அந்த நேரத்தில் வந்து, ‘வேண்டும் வேண்டும் மீனவருக்கு சீட் வேண்டும்…’ என கோஷம் எழுப்பினர். கோஷத்திலும் கோக்குமான கோஷமாக இருந்தது. ராகுல் வாழ்க பெருந்தகை வாழ்க கார்கே வாழ்க…என கிரிஷ் சோடங்கர் வரைக்கும் வாழ்க கோஷம் போட்டுவிட்டனர். பின்னர், ‘வஞ்சிக்காதே…வஞ்சிக்காதே மீனவர்களை வஞ்சிக்காதே…’ என இன்னொரு கோஷம். ‘இப்போ யாரை எதிர்த்துதான் சார் நீங்க போராடுறீங்க..’ என நிருபர்களுக்கே தலை கிறுகிறுத்தது. கோஷத்தை ஒரே ஒரு ரவுண்ட் வாசித்துவிட்டு இடத்தை காலி செய்ய நினைத்தனர்.

ஊடகத்தினர்தான்…’சார் ஒரு 5 நிமிசமாச்சு புட்டேஜ் வேணும். இன்னொரு தடவை கோஷம் போடுங்க’ என்றனர். சீட்டு கேட்டு கோஷம் போட வந்தவர்களை புட்டேஜூக்காக கோஷம் போட சொல்ல கொஞ்சம் அலுத்துக் கொண்டே கோஷம் போட்டுக் கொண்டு கலைந்தது அந்த க்ரூப்.
11 பேர் இருந்தால் ஒரு கிரிக்கெட் டீம் ரெடி. 20 பேர் இருந்தால் காங்கிரஸில் ஒரு கோஷ்டி ரெடி. கட்சியை வளர்க்க இத்தனை கோஷ்டிகளும் கொடி பிடித்திருந்தால் எப்போதோ கட்சி வளர்ந்திருக்கும். வேட்புமனு தாக்கல் செய்ய ஏப்ரல் 6 வரை நேரமிருந்தாலும், இன்னும் 2 நாட்கள்தான் வேட்பு மனு செய்ய முடியும். ‘பொறுமையே பெருமை…’ என காலம் தாழ்த்திக் கொண்டிருக்கும் காங்கிரஸ் தலைமை கண் விழிக்க வேண்டிய நேரமிது.!
