தமிழகத்தில் வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், நாளுக்கு நாள் தேர்தல் களம் அனலாக மாறி வருகிறது. தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று பொதுமக்களை நேரடியாக சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்தல் தேதி அறிவித்தவுடன் தவெக தலைவர் விஜய், தீவிர தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்னும் சில ஊர்களுக்குச் செல்லாமல் பொறுமையாகவே கையாண்டு வருகிறார். பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிடும் விஜய், வேட்புமனுவை தாக்கல் செய்த பிறகு பெரம்பூர், கொளத்தூர் ஆகிய இரு இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அதன் பின்னர் ஆதவ் அர்ஜுனாவை ஆதரித்து வில்லிவாக்கம் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ளவிருந்த நிலையில் பாதுகாப்பு காரணமாக திடீரென அந்த நிகழ்ச்சி தவெக சார்பிலேயே ரத்து செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து, திருச்சி கிழக்கில் வேட்புமனுவைத் தாக்கல் செய்து திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன் பின்னர் தி.நகர், வில்லிவாக்கம், சைதாப்பேட்டை தொகுதியில் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்திருந்தது. ஆனால், குறைவான நேரம் கொடுக்கப்பட்டதாலும் காவல்துறை தரப்பில் அதிகமான நிபந்தனைகளை விதித்ததாலும் தவெக சார்பில் அந்த பிரச்சார நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர் திருநெல்வேலியில் ரோடு ஷோ நடத்தி விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். அங்கு ஏராளமான கூட்டம் கூடியதால் தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்யாமலேயே விஜய் புறப்பட்டுச் சென்றார். இதற்கிடையில், கடலூர், புதுக்கோட்டை, தர்மபுரி ஆகிய இடங்களுக்கு பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியும் தவெக தரப்பில் அதை ரத்து செய்தனர். இதனால் தொண்டர்கள் அதிருப்திக்குள்ளாகினர்.
இப்படியாக ஒவ்வொரு இடங்களிலும் விஜய் பேசுவார் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நிலையில், அடிக்கடி ரத்து செய்வதால் நிறைய சிக்கல் ஏற்பட்டுள்ளன. இதனால் பொதுமக்களை கவரும் வகையில் தவெக வேட்பாளர்கள் வித்தியாசமான முறையிலும் நூதன முறையிலும் வாக்கு சேகரித்து வருகின்றனர். அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு ஒரு நபரை விஜய் போல் வேடமிட வைத்து தவெக வேட்பாளர் ஒருவர் மக்களிடம் வாக்கு சேகரித்தார். இதையடுத்து, விஜய் போல் பொம்மையை பயன்படுத்தியும், விஜய் போன்ற முக மாஸ்க் அணிந்தும் என சில வேட்பாளர்கள் நூதன முறையில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இவை அனைத்தும் முற்றிலும் மாறுபட்ட வகையில் கும்பகோணம் தொகுதி தவெக வேட்பாளர் ஒருவர் நூதன முறையில் வாக்கு சேகரித்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தொகுதியில் தவெக சார்பில் வினோத் ரவி என்பவர் போட்டியிடுகிறார். இவர் தனது தொகுதியில், ஹாலோகிரோபி தொழில்நுட்பம் மூலம் விஜய் நின்று பேசி வாக்கு கேட்பது போல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஹாலோகிரோபி மூலம் விஜய் வாக்கு சேகரிப்பில் ஈடுபட செய்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
