சிட்னி: ஆஸ்திரேலியாவில், ரம்ஜான் நோன்பின் முடிவை குறிக்கும் தொழுகைக்காக சென்ற அந்நாட்டு பிரதமர் அந்தோணி

சிட்னி: ஆஸ்திரேலியாவில், ரம்ஜான் நோன்பின் முடிவை குறிக்கும் தொழுகைக்காக சென்ற அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ், உள்துறை அமைச்சர் டோனி பர்க் ஆகியோருக்கு, அங்கிருந்தோர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

ரம்ஜான் நோன்பின் இறுதி நாளை குறிக்கும், ஈத் – அல் – பித்ர் தொழுகைக்காக, ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள மிகப்பெரிய மசூதியான லக்கம்பாவிற்கு, அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பனீஸ், உள்துறை அமைச்சர் டோனி பர்க் உள்ளிட்டோர் சென்றனர்.

தொழுகை துவங்கிய 15வது நிமிடத்தில், பிரதமரையும், அவரது அமைச்சரவை சகாக்களையும் பார்த்து, ‘இனப் படுகொலைக்கு ஆதரவானவர்கள், வெட்கக்கேடு, வெளியேறு’ என்ற முழக்கங்களை அங்கிருந்த சிலர் எழுப்பினர். ஒருவர் பிரதமரை நோக்கி, ‘அவர் ஏன் இங்கிருக்கிறார்? அவரை வெளியேற்றுங்கள்’ என கூச்சலிட்டார்.

எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, பிரதமர் அல்பனீஸ் அங்கிருந்து வெளியேறினார். முழக்கமிட்ட நபர்களை போலீசார் அப்புறப்படுத்தினர்.

லக்கம்பா மசூதியை நிர்வகிக்கும் லெபனான் முஸ்லிம் சங்கம், பிரதமரை அழைத்த முடிவை நியாயப்படுத்தியுள்ளது. ‘முஸ்லிம்கள் சந்திக்கும் பிரச்னைகளை நேரடியாக தெரிவிக்கவே பிரதமர் அல்பனீஸ் அழைக்கப்பட்டார். பேச்சை தவிர்ப்பதால் எந்த நன்மையும் இல்லை’ என அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

காசா போரில், இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாக ஆஸ்திரேலிய அரசு செயல்படுவதாகவும், போரை நிறுத்த அழுத்தம் கொடுக்கவில்லை எனவும் முஸ்லிம் சமூகத்தினர் கருதுகின்றனர். மேலும், கடந்த டிசம்பரில் போண்டாய் கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 15 பேர் கொல்லப்பட்டனர்.

இதையடுத்து, சில முஸ்லிம் அமைப்புகள் தடை செய்யப்பட்டன. இதனால், முஸ்லிம்கள் மீதான வெறுப்புணர்வு ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ளது. இதுவே, முஸ்லிம் சமூகத்தின் ஒரு பகுதியினரின் கோபத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

Source link