“சிபிஐ விசாரணையை விஜய் கேட்க தயாரா?”

தவெக தலைவர் விஜய்யின் கடைசிப் படமான ‘ஜன நாயகன்’ சிபிஎஃப்சி-யிடம் சிக்கி பெரும் பிரச்சனையை சந்தித்தது. ஜனவரி 9ஆம் தேதி வெளியாகவிருந்த இப்படம், இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்த சூழலில் ஜன நாயகன் படத்தின் 5 நிமிட காட்சிகள் சமீபத்தில் இணையத்தில் கசிந்தது. பின்பு மொத்த படமும் வெளியானது. இதனால் படக்குழுவினரும் விஜய் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதையடுத்து பட தயாரிப்பு நிறுவனம் சார்பில் அந்நிறுவனத்தின் சட்ட ஆலோசகர், விஜயன் சுப்ரமணியன் படத்தை கசிய விட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் படத்தை பதிவிறக்கம் செய்வதோ, அனுப்புவதோ, சேமிப்பதோ இதுபோன்று எது செய்தாலும் சட்டப்படி குற்றம் எனக்கூறி சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிமையியல் மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்திருந்தார். பின்பு படத் தயாரிப்பு நிறுவனமும் அதே எச்சரிக்கையோடு அறிவிக்கை வெளியிட்டது. இந்த சட்டவிரோதமான நடவடிக்கையை கண்டித்து பல திரைபிரபலங்கள், சங்கங்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விவகாரத்தில் விஜய் அரசியல் சதி நாடகம் போடுவதாக தமிழக பாஜகவின் செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானது குறித்து தமிழக வெற்றி கழகம், தமிழக காவல்துறையில் ஏன் உடனடியாக புகார் அளிக்கவில்லை? என்று தவெ.கவின் நாடக அரசியலை சுட்டிக்காட்டிய உடன் சைபர் கிரைம் போலீசில் இன்று மதியம் அவசர அவசரமாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. படத்தை தாங்களாக வெளியிட்டு தவறை செய்துவிட்டு அதை மறைக்க கொடுக்கப்பட்ட இந்த மோசடி புகார் குறித்த உண்மைகள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும். இந்திய அரசியல் சாசன சட்டப்படி சுதந்திரத்துடன் இயங்கக்கூடிய சென்சார் போர்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஜனநாயகன் படம் வெளியானதில் மத்திய அரசுக்கு மத்திய அமைச்சருக்கும் எந்தவித சம்பந்தமும் துளியும் இல்லை.

ஜனநாயகன் படம் இணையத்தில் வெளியானதால் 500 கோடி ரூபாய்க்கு மேல் தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்படும் என்று களவாணி அரசியல் மக்களை ஏமாற்றி பரிதாப வாக்குகளைப் பெற நாடகம் ஆடுவது நியாயமா? பாஜக மீதும் மத்திய அமைச்சர் முருகன் மீதும் பொய் குற்றம்சாட்டி அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்கிற தீய அரசியல் உள்நோக்கத்துடன் தமிழகத்தின் பட்டியல் இன பிரதிநிதியாக நேர்மையோடு செயல்படும் மத்திய அமைச்சர் முருகனை அவமதிக்கும் நோக்கத்துடன், அவதூறு பரப்பிவிட்டு டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் தான் எங்கள் கொள்கை தலைவர் என்று கூறுவதற்கு வெட்கமாக இல்லையா? இது குறித்து விசாரிக்க சிபிஐ விசாரணையை நடிகர் விஜய் கேட்க தயாரா? இதுவரை ஏன் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் வெளியானது குறித்து தமிழக வெற்றி கழகம், தமிழக காவல்துறையில் ஏன் புகார் அளிக்கவில்லை? ஜனநாயகன் படத்தை வைத்து பொய்களைக் கூறி வாக்கு அரசு அரசியல் செய்வதுதான் பெரியார் கற்றுக் கொடுத்த கொள்கை அரசியலா?

ஜனநாயகம் திரைப்படம் இணையத்தில் கசிந்ததற்கு மத்திய அமைச்சர் முருகனும் காரணம் என்று அரசியல் வியாபாரி ஆதவ் அர்ஜுனா குற்றம் சாட்டியது, தேர்தல் அரசியலுக்காக சொல்லப்பட்டுள்ள மன்னிக்க முடியாத வடிகட்டிய பொய். அவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளை தமிழக பாஜக எடுக்கும். கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் முதல், தன்னுடைய குடும்பம் தொடங்கி, தான் போட்டியிடும் வில்லிவாக்கம் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் தன்னுடைய ஆட்களை வைத்து பாட்டில் வீசி நாடகம் நடத்தியது என, ஒவ்வொரு அரசியல் கூட்டங்களிலும் ஊடக சந்திப்புகளிலும் பொய்களைப் பேசி, திரை மறைவு நாடகங்களை நடத்தி அரசியல் பிழைப்பு நடத்துபவருக்கு பாஜகவை பற்றி பேச தகுதி இல்லை. எம்ஜிஆரையும் விஜயையும் இணைத்து பேசி அதிமுக ஓட்டுக்களை பிரிக்கலாம் மற்றும் விஜயின் ஜனநாயகன் படம் இணையத்தில் கசிய விட்டு பாஜகவிற்கு எதிராக அவதூறு பேசி வாக்காளர்களை குழப்பி ஆதாயம் தேடலாம் என திட்டமிட்டு சதி அரசியல் செய்யும் ஆதவ் அர்ஜுனாவின் கீழ்த்தரமான பகல் கனவு பலிக்காது.

திமுகவிற்கு ஓட்டு போடுவது தற்கொலை செய்வதற்கு சமம் என்பதை மக்கள் உணர்ந்து விட்டார்கள். திமுகவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கின்ற வாக்காளர்கள் எதிர்ப்பு ஓட்டுக்கள்  தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு கிடைக்கக் கூடாது என்ற சதி திட்டத்துடன் ஆதவ் அர்ஜுனா தொடர்ந்து செயல்படுகிறார். அமைச்சர் முருகன் மீது பொய் குற்றச்சாட்டின் மூலம் ஆதவ் அர்ஜுனாவின்  தீய எண்ணம் வெளிப்படையாக தெரிகிறது. ஆதவ் அர்ஜுனா தமிழக வெற்றி கழக வேட்பாளர்களுக்கு துணையாக தானும் வில்லிவாக்கம் தொகுதியில் டெபாசிட் இழப்பார்” எனத் தெரிவித்துள்ளார். 

Source link