சிமெண்ட் இல்ல கான்கிரீட் சாலை அமைக்க அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பொறியியல் புலத்தில் கட்டமைப்பு துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆண்டனி ஜெயசேகர் மற்றும் முனைவர் திருஞானசம்பந்தம் ஆகியோர் பல்கலைக்கழக ஜியோ பாலிமர் கான்கிரீட் என்னும் சிமெண்ட் இல்ல கான்கிரீட் பற்றி கடந்த 2009 ஆம் ஆண்டு முதல் ஆராய்ச்சி மேற்கொண்டனர். இதனை புதுடில்லியில் உள்ள தேசிய அனல்மின் நிறுவனம் நிலக்கரி சாம்பலை சிமெண்டுக்கு மாற்றாக பயன்படுத்தி காங்கிரீட் சாலை அமைக்க பல்கலைக்கழக பேராசிரியர்கள் இருவரையும் கடந்த 2019 ஆம் ஆண்டு ஆலோசகர்களாக நியமித்தது.
இதனையொட்டி உத்தரபிரதேசத்தில் உள்ள ரிஹாண்டு மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ராமகுண்டத்திலும் 4 கி.மீ நீளத்திற்கு சிமெண்ட் இல்ல கான்கிரீட் சாலை ரூபா 6 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. இந்த சாலை அமைக்க அண்ணாமலைப் பல்கலைக்கழக கட்டமைப்பு துறையில் உள்ள ஜியோ பாலிமர் கான்கிரீட் ஆய்வகத்தில் பல்வேறு கட்ட ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு கான்கிரீட்டுக்கு பயன்படுத்தப்பட்ட நிலக்கரி சாம்பல், இரும்பு உருக்காலை கசடு, மணல், ஜல்லி மற்றும் கார திரவ கரைசல் விகிதாச்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு பேராசிரியர்களின் நேரடி மேற்பார்வையில் சாலை அமைக்கப்பட்டது
ஜியோ பாலிமர் காங்கிரீட்டில் ஒரு நாள் வெயில் மட்டுமே கான்கிரீட் வலுவடைய போதுமானதாகும். பழுதடைந்த காங்கிரீட் சாலையில் இந்த ஜியோ பாலிமர் காங்கிரீட்டை பயன்படுத்தினால் ஒரே நாளில் போக்குவரத்தை அனுமதிக்கலாம் என்பது சிறப்பு அம்சமாகும். ஜியோ பாலிமர் காங்கிரீட் சாலை கீழடுக்கு மற்றும் மேலடுக்கு என இரண்டு அடுக்குகளை கொண்டது. கீழடக்கு பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட காங்கிரீட் கலவையாகவும், இதனை கடந்த 2024-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் தேசிய அனல் மின் நிறுவனமும் இணைந்து 20 வருட காப்புரிமையை பெற்றது.
தொடர்ந்து மேல் அடுக்குக்கான காப்புரிமையை கடந்த 2021ஆம் ஆண்டு இந்திய அரசிடம் விண்ணப்பித்தனர். தற்போது சிமெண்ட் இல்லா ஜியோ பாலிமர் காங்கிரீட் சாலை மேம்பாட்டிற்காக 20 வருடக் காப்புரிமை பல்கலைக்கழகத்திற்கும் தேசிய அனல் மின் நிறுவனத்திற்கும் இந்திய அரசு வழங்கியுள்ளது. இதனை அறிந்த பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் அறிவுடைய நம்பி, பதிவாளர் சிங்காரவேல் பொறியியல் புல முதல்வர் கார்த்திகேயன் ஆகியோர் பேராசிரியர்களை அழைத்து வாழ்த்து கூறினர்.
