வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடந்த நிலையில் திடீரென நிறுத்தப்பட்டது. அதாவது ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் போது அப்பட தயாரிப்பாளரிடம் சிம்பு மீண்டும் ஒரு படத்தில் நடிப்பதாக முன்பணம் வாங்கியிருக்கிறார். ஆனால் அப்படம் சில காரணங்களால் நடக்காமல் போக அந்த முன் பணத்தை திரும்ப கொடுக்காமல் இருந்திருக்கிறார். இதனால் படத் தயாரிபாளர் ஐசரி கணேஷ் நீதிமன்றம் சென்றார். இந்த வழக்கில் சிம்புக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் ஆகியோரிடம் ஐசரி கணேஷ் முறையிட்டார். இதனால் இந்த இரு சங்கமும் அரசன் படப்பிடிப்பை நிறுத்தியது. மேலும் சிம்பு நடிக்கவிருந்த ஒரு விளம்பர படத்தையும் நிறுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன் தினமான 7ஆம் தேதி சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர் காட்டமாக ஒரு அறிக்கை விட்டார். அதில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் ஒரு தயாரிப்பாளரோடு சேர்ந்து இரு சங்கங்களும் அரசன் படப்பிடிப்பை நிறுத்தியிருக்கிறார்கள். ஒரு தயாரிப்பாளருக்காக அவர்கள் நிற்கும் போது, ஒரு நடிகருக்காகஏன் தென் இந்திய நடிகர் சங்கமும் நிற்கக்கூடாது?” என அவர் தரப்பு நியாயத்தை கோரியிருந்தார். இந்த விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அரசன் படத் தயாரிப்பாளர் தாணு, ஐசரி கணேஷ், தயாரிப்பாளர் சங்கம் மற்றும் ஃபெப்சி ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர். இதில் ஐசரி கணேஷ் கேட்ட தொகையை பெரும் பகுதி சிம்புவும் சிறு பகுதி தாணுவும் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் விரைவில் அரசன் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அதோடு அந்த விளம்பர படமும் தொடங்கும் என கூறப்படுகிறது.
