சென்னை: சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம். திமுக எங்களுக்கு கொடுத்த தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் சின்னம் தொடர்பாக எங்களுக்கு வருத்தம் உள்ளது என மதிமுக தெரிவித்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் களத்தில் அனல் பறந்து கொண்டிருக்கிறது. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள், வேட்பாளர்கள் பட்டியல் உள்ளிட்டவற்றை வெளியிடுவதில் அரசியல் கட்சிகள் மும்முரம் காட்டி வருகிறது.
கூட்டணிக் கட்சிகள் திமுக தொகுதிப் பங்கீடு குழுவிடம் தொகுதிகள் அடங்கிய பட்டியலைச் சமர்ப்பித்துள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக் குழுவிடம் மதிமுக நிர்வாகிகள் விருப்பத் தொகுதிகள் அடங்கிய பட்டியலை அளித்தனர்.
பின்னர் மதிமுக அவைத் தலைவர் அர்ஜுன ராஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஒதுக்கப்பட்டு உள்ள அந்த நான்கு தொகுதிகள் எவை என்பது குறித்த அதிகாரப் பூர்வ ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, கட்சித் தலைமை முறைப்படி அறிவிக்கும் நாங்கள் கேட்ட தொகுதிகளைத் தந்ததில் மகிழ்ச்சி.
அதேநேரத்தில் மதிமுகவின் தகுதிக்குத் தகுந்தாற்போல் எங்களுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட வில்லை என்று வருத்தமும் எங்களுக்கு இருக்கிறது. சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம் அப்படிதான் எங்களுடைய நிலைமை.
அதேபோல் நான்கு தொகுதிகளிலும் எங்கள் சின்னத்தில் போட்டிபோட முடியவில்லை என்ற வருத்தமும் எங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நான்கு தொகுதிகளில் மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்திலும், ஒரு தொகுதியில் மட்டும் மதிமுகவின் சின்னத்திலும் போட்டியிட ஒப்பந்தம் கையெழுத்து ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது
