திருப்பூர்: புதிய வருமான வரி சட்டப்படி, 45 நாட்களுக்குள் கொடுக்க வேண்டிய நிலுவை தொகையை குறு, சிறு நிறுவனங்களுக்கு செலுத்தாத பெருநிறுவனங்கள் 30 சதவீதம் வரை வருமான வரி செலுத்த நேரிடும் என, ஆடிட்டர்கள் எச்சரித்து வருகின்றனர்.
மத்திய அரசின் வருமான வரி சட்டப்பிரிவு 43 பி(எச்) திருத்தப்படி, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, சேவை கட்டணத்தை பெறுவது கடும் சவாலாக மாறி உள்ளது. எனவே, கட்டண தொகையை விரைந்து பெற ஏதுவாக, வருமான வரி சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கொடுக்க வேண்டிய சேவை கட்டண தொகையை, 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். தவறினால், நிதியாண்டின் நிறைவில், செலுத்தப்படாத செலவு தொகை வருமானமாக கருதி, வருமான வரி விதிக்கப்படும்.
இரு தரப்பினரும் ஒப்பந்தம் செய்து கொண்டால், 45 நாட்களுக்குள் செலுத்தலாம் அல்லது ஒப்பந்தம் செய்யாவிடில், 15 நாட்களுக்குள் செலுத்த வேண்டுமென சட்டத் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இதனால், தொழில் துறையினர் தங்களது உற்பத்தி சேவைகளுக்கான கட்டணத்தை, 45 நாட்களுக்குள் செலுத்துவது கட்டாயமாகியுள்ளது.
நடப்பு நிதியாண்டு நிறைவடைய இன்னும் 12 நாட்களே உள்ளதால், தொழில் நிறுவனங்கள் தங்களது செலவு கணக்கை நேர் செய்ய வேண்டுமென, ஆடிட்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
