கொல்கட்டா: “மேற்கு வங்க மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம், அங்குள்ள ஹிந்துக்களை சிறுபான்மையினராக மாற்றிவிடும். இந்த நிலை மாற, அங்கு பா.ஜ.,வின் வெற்றி அவசியம்,” என, அக்கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் சுகந்த மஜும்தார் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி அமைந்துள்ளது. இங்குள்ள 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக அடுத்த மாதம் 23 மற்றும் 29ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது.
மக்கள் தொகை
அங்குள்ள களநிலவரம் கு றித்து பா.ஜ., – எம்.பி.,யும், மத்திய அமைச்சருமான சுகந்த மஜும்தார் நேற்று கூறியதாவது: மேற்கு வங்கத்தின் எல்லை மாவட்டங்களில் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், மாநிலத்தின் அரசியல் களத்தையே மாற்றியமைத்து வருகிறது. இங்கு, இன்னும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவில்லை. இருப்பினும், மாநில மக்கள் தொகையில் முஸ்லிம்கள் 33 சதவீதம் இருப்பதாக முதல்வர் மம்தா தெரிவித்துள்ளார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த சதவீதம் மேலும் அதிகரிக்கும். அதன்பின், தேர்தலில் ஹிந்துக்கள் வெற்றி பெறுவது கடினமாகிவிடும். எனவே, திரிணமுல் காங்., தொடர்ந்து ஆட்சியில் நீடிக்குமானால், மாநிலத்தில் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் சக்தியாக ஹிந்துக்கள் விளங்கும் கடைசி தேர்தலாக இது இருக்கும்.
அவசியம்
ஏற்கனவே ஒரு முஸ்லிம் துணை முதல்வர் வேண்டும் என்ற கோரிக்கைகள் மேற்கு வங்கத்தில் ஒலிக்கத் துவங்கிவிட்டன. இது நிறைவேற்றப்பட்டால், இறுதியில் ஒரு முஸ்லிம் முதல்வர் உருவாக வழிவகுக்கும்.
மேற்கு வங்கத்தின் பெரும்பகுதி ஏற்கனவே குற்றவாளிகள், அடிப்படைவாதிகள் மற்றும் மதவெறியர்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டது. இதை தடுக்க வேண்டியது மிகவும் அவசியம். இந்த தேர்தல் மேற்கு வங்க ஹிந்துக்களை காப்பாற்றுவது பற்றியது மட்டுமல்ல; அம்மாநிலம் பாகிஸ்தானாகவோ, ஆப்கானிஸ்தானாகவோ மாறிவிடாமல் தடுப்பது பற்றியது. இவ்வாறு அவர் கூறினார்.
