சிறுமியருக்கு பாலியல் தொல்லை: ஆசிரியர், தலைமை ஆசிரியர் கைது

திருச்சி: அரசு பள்ளி மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மற்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க தவறிய, தலைமை ஆசிரியர், ‘போக்சோ’வில் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தொப்பம்பட்டி அரசு துவக்கப்பள்ளியில், மூன்றாம் வகுப்பு ஆசிரியராக முத்தபுடையான்பட்டியைச் சேர்ந்த பாஸ்கரன், 57, என்பவர் பணியாற்றினார். அப்போது, அங்கு பயிலும் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, மாணவியரின் பெற்றோர், தலைமை ஆசிரியர் பொத்தமேட்டுபட்டியைச் சேர்ந்த வேளாங்கண்ணி, 55, என்பவரிடம் புகார் தெரிவித்தனர்; அவர் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், பள்ளியை முற்றுகையிட்டு, பெற்றோர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள், போலீசார் வந்து அவர்களை சமாதானப்படுத்தினர்.

புகாரின்படி, மணப்பாறை அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து, மாணவியருக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் பாஸ்கரன், நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியர் வேளாங்கண்ணி ஆகிய இருவரையும், போக்சோ சட்டத்தில் நேற்று கைது செய்தனர். இருவரையும் சஸ்பெண்ட் செய்து, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Source link