சிலிகுரி: “வடகிழக்கு மாநிலங்களை, நாட்டின் பிற பகுதிகளில் இருந்து பிரிக்க நினைக்கும், சின்னஞ்சிறு குழுக்களுக்கு ஆதரவாக திரிணமுல் காங்கிரஸ், வீதி முதல் பார்லிமென்ட் வரை வரிந்து கட்டி வருகிறது. ஓட்டு வங்கி அரசியலுக்காக, தேச விரோத கும்பலை கூட அக்கட்சி தாஜா செய்ய தொடங்கியுள்ளது,” என, பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள 294 தொகுதிகளுக்கு, இரண்டு கட்டங்களாக வரும் 23 மற்றும் 29ம் தேதி, சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. ஆட்சியில் நீடிக்கும் முனைப்பில் ஆளும் திரிணமுல் காங்கிரசும், அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கில் பிரதான எதிர்க்கட்சியான பா.ஜ.,வும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இங்குள்ள சிலிகுரியில், பா.ஜ., சார்பில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது:
நம் நாட்டின் பிற பகுதிகளுடன், வடகிழக்கு மாநிலங்களை இணைப்பதற்காக சிலிகுரி வழித்தடத்தை மத்திய அரசு மேம்படுத்தி வருகிறது. இந்த முக்கிய வழித்தடத்தை துண்டிக்கப் போவதாக சின்னஞ்சிறிய குழுக்கள் மிரட்டல் விடுத்து வருகின்றன. வடகிழக்கு மாநிலத்தை தனியே ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதே அவர்களின் விருப்பமாக உள்ளது.
இப்படிப்பட்ட தேசவிரோத கும்பல்களுக்கு ஆதரவாக, திரிணமுல் காங்., செயல்படுகிறது. அவர்களுக்காக வீதி முதல் பார்லி., வரை அக்கட்சி வரிந்து கட்டிக் கொண்டு வருகிறது. அதற்கு தாஜா அரசியலே முக்கிய காரணம். இது தான் திரிணமுல் காங்., கட்சியின் உண்மையான முகம். கடந்த 15 ஆண்டு கால ஆட்சியில் மேற்கு வங்கத்தை, அக்கட்சி பல வழிகளில் சுரண்டி அழித்து விட்டது.
முக்கியமான மத்திய திட்டங்களை நிறைவேற்றவிடாமல் முடக்கி வைக்கிறது. இதனால், மேற்கு வங்கத்தில் மத்திய அரசு திட்டங்கள் 25 சதவீதத்துக்கும் குறைவாகவே நிறைவேற்றப்பட்டுள்ளன. இஸ்லாமிய மத கல்வியை போதிக்கும் மதரசாக்களை மேம்படுத்த, 6,000 கோடி ரூபாயை திரிணமுல் அரசு ஒதுக்கியது. ஆனால், மாநில வளர்ச்சி என வரும்போது சொற்ப அளவிலேயே நிதியை ஒதுக்குகிறது. பழங்குடியினர், மகளிர் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான கட்சியாக திரிணமுல் விளங்குகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
