புதுடில்லி: நுகர்வோர் விலை குறியீடு அடிப்படையிலான நாட்டின் சில்லரை விலை பணவீக்கம், கடந்த டிசம்பரில், மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு 1.33 சதவீதமாக உயர்ந்துள்ளது என, மத்திய புள்ளியியல் அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சற்றே அதிகரித்துள்ள போதிலும், தொடர்ந்து நான்காவது மாதமாக ரிசர்வ் வங்கியின் குறைந்தபட்ச பணவீக்க வரம்பான, இரண்டு சதவீதத்துக்குள்ளாகவே இது பதிவாகிஉள்ளது.
காய்கறிகள், முட்டை, இறைச்சி, மசாலா பொருட்கள், பருப்பு வகைகள் உள்ளிட்ட உணவு பொருட்களின் விலை உயர்வே, பணவீக்கம் அதிகரிக்க முக்கிய காரணமாக அமைந்துள்ளது. எனினும், உணவு பொருட்கள் பிரிவு பணவீக்கம், தொடர்ந்து ஏழாவது மாதமாக மைனஸ் நிலையில் பதிவாகியுள்ளது.
கடந்தாண்டு நவம்பரில், மைனஸ் 3.91 சதவீதமாக இருந்த உணவு பிரிவு பணவீக்கம், டிசம்பரில் மைனஸ் 2.71 சதவீதமாக சற்றே மேல் நோக்கி பதிவானது. நகரங்களில் 2.03 சதவீதமாகவும், கிராமங்களில் 0.76 சதவீதமாகவும் விலை உயர்வு பதிவாகியுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை, பணவீக்கம் 2.67 சதவீதமாக இருந்தது.
