சிவகங்கை: தமிழக சட்டசபை தேர்தலில் இன்றைய சூழலில் தி.மு.க.,விற்கு தகுதியான போட்டியாளரே கிடையாது என காளையார்கோவிலில் தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் அவர் கூறியதாவது: 5 ஆண்டு காலம் தமிழகத்தின் முதல்வராக இருந்து ஸ்டாலின் ஆற்றிய பல்வேறு திட்டங்கள் நாட்டு மக்களுக்கு நன்மை அளிக்கிற திட்டங்களாக உள்ளது.
வரும் சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தான் மீண்டும் முதல்வராக வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
இன்றைய அரசியல் சூழலில் தி.மு.க.,விற்கு எதிராக எந்த அரசியல் கட்சியும் போட்டியிடக்கூடிய தகுதி இல்லை.
அண்ணாதுரை ஆரம்பித்த திராவிட முன்னேற்றக் கழகத்தில் தான் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
பழனிசாமி ஒரு சுயநலவாதி. ஒரு தலைவர் அனைத்து மக்களையும் அனைவரையும் அரவணைப்போடு நடத்திச் செல்ல வேண்டும்.
அந்த பண்பாடு பழனிசாமியிடம் இல்லை. அ.தி.மு.க.,வை படுகுழியில் தள்ளியவர் பழனிசாமி. அ.தி.மு.க.,வை எங்கு கொண்டுபோய் அடகு வைத்துள்ளார்கள் என்பதை நாட்டு மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
சாதாரண தொண்டனாகத் தான் தி.மு.க.,வில் இணைந்து இருக்கிறேன். விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்துள்ளார். சட்டசபை தேர்தலில் தனித்துத்தான் போட்டியிடுவோம் என்று சொல்லியிருக்கிறார்.
மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆட்சியாக ஸ்டாலின் ஆட்சி இருக்கிறது என்றார்.
