சிவகங்கை: ‘கிராபைட்’ தொழிற்சாலையில், 3 மாதங்களாக விற்பனையாகாமல், 500 டன்னுக்கு மேல் கிராபைட் தேங்கியுள்ளது.
சிவகங்கை அருகே, கோமாளிப்பட்டியில், கிராபைட் ஆலை உள்ளது. இங்கு, 1971ல் அரசு கனிம நிறுவனம், 900 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தியது. 1988ல் அடிக்கல் நாட்டப்பட்டு, 1994 முதல், ஆலை செயல்படுகிறது.
இங்கு கிடைக்கும் கிராபைட்டை பயன்படுத்தி, பென்சில், உராய்வு தடுப்பான், லித்தியம் அயன் பேட்டரி, விமானத்தில் அதிக வெப்பம் தாங்கும் பொருட்கள், ராக்கெட் உதிரிபாகங்கள், தங்கம் மற்றும் இரும்பு உருக்கும் உலை ஆகியவை தயாரிக்க முடியும்.
தோண்டி எடுக்கப்படும் கிராபைட் கற்கள் சிவகங்கையில் துணைத்தொழிற்சாலை துவங்கப்படாததால், சுத்திகரிக்கப்பட்டு ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இந்த ஆலையில், 120 ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
கடந்த 3 மாதங்களாக, சுத்திகரிக்கப்பட்ட கிராபைட் விற்பனையாகவில்லை. கிராபைட் விலை தொடர்பாக ஏற்பட்ட பிரச்னையால், ஆந்திர நிறுவனம் வாங்கவில்லை. இதனால், ஆலையில், 500 டன்னுக்கு மேலாக, கிராபைட் தேங்கி உள்ளது.
கிடங்கு நிரம்பியதால், திறந்தவெளியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள கிராபைட் வீணாகும் நிலை உள்ளது. இது தொடர்ந்தால், ஆலை முடங்க வாய்ப்பு உள்ளது. ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடும்.
எனவே, அரசு தலையிட்டு, தேங்கியுள்ள கிராபைட்டை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. இந்த ஆலையை நடத்தும் ‘டாமின்’ நிறுவன அதிகாரிகள் கூறுகையில், ‘ஆந்திர நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தப்பட்டு வருகிறது. விரைவில், அந்த நிறுவனம் கிராபைட் வாங்கும்’ என்றனர்.
சிவகங்கை ஆலையில் 500 டன் கிராபைட் தேக்கம்
திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள கிராபைட், வீணாகும் சூழல்.
