சிவகாசி: சிவகாசியில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சின் டிஜிட்டல் பெயர் பலகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பெயர் ஆங்கிலத்தில் ஒளிபரப்பானது. பஸ்சின் வைபை ஹேக் செய்யப்பட்டு இவ்வாறு நடந்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இதை கண்ட பயணி ஒருவர் தனது அலைபேசியில் வீடியோ எடுத்தார். பஸ் டிரைவர் உடனடியாக டிஜிட்டல் பலகையில் எழுத்துக்களை மாற்றினார். சில நாட்களுக்கு முன் தேனி மாவட்டத்திலும் இதே போல் அரசு பஸ் டிஜிட்டல் பலகையில் தமிழக வெற்றிக் கழகம் என பெயர் ஒளிபரப்பானது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, பஸ்களின் பெயர்பலகை ஒளிரும் எழுத்துக்கள் பென்டிரைவில் ப்ரோக்ராம் செய்யப்பட்டு தரப்படுகிறது. இந்த பஸ்களில் செல்லுமிடம் தெரிவதற்காக ஜி.பி.எஸ். இணைப்பு உள்ளது. அதற்கு வைபை தேவை. இதன் பராமரிப்பை தனியார் நிறுவனம் செய்கிறது. வைபை மூலம் இதை ேஹக் செய்து இந்த எழுத்துக்களை சேர்த்திருக்கலாம். அது குறித்து விசாரித்து வருகிறோம், என்றனர்.
