புதுடில்லி: பி.சி.சி.ஐ., வர்ணனையாளர் குழுவிலிருந்து சிவராமகிருஷ்ணன் ஓய்வு பெற்றார்.
முன்னாள் இந்திய சுழற்பந்துவீச்சாளர் லட்சுமண் சிவராமகிருஷ்ணன் 60. சென்னையை சேர்ந்த இவர், இந்தியாவுக்காக (1983-87) 9 டெஸ்ட் (26 விக்.,), 16 ஒருநாள் (15 விக்.,) போட்டிகளில் விளையாடினார். தவிர இவர், 76 முதல் தரம் (154 விக்.,), 33 ‘லிஸ்ட் ஏ’ (37 விக்.,) போட்டிகளிலும் பங்கேற்றார். இந்தியா-வங்கதேசம் அணிகள் மோதிய டெஸ்ட் போட்டியில் (2000) முதல் முறையாக வர்ணனையாளராக செயல்பட்டார். இவருக்கு போட்டியில் ‘டாஸ்’, ‘பிட்ச் ரிப்போர்ட்’, பரிசளிப்பு விழாவை தொகுத்து வழங்க வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் பி.சி.சி.ஐ., வர்ணனையாளர் குழுவில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
நிற பாகுபாடு புகார்: இதுகுறித்து சிவராமகிருஷ்ணன், சமூகவலைதளத்தில் வெளியிட்ட செய்தியில், ‘பி.சி.சி.ஐ., வர்ணனையாளர் குழுவில் இருந்து ஓய்வு பெறுகிறேன். கடந்த 23 ஆண்டுகளாக போட்டியில் ‘டாஸ்’ நிகழ்வு, பரிசளிப்பு விழாவை தொகுத்து வழங்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை. புதிதாக வருபவர்களுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டது. ரவி சாஸ்திரி பயிற்சியாளராக இருந்த போதும் இதுதான் நடந்தது. இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒருவேளை எனது கருப்பு நிறம் ஒரு பிரச்னையாக இருக்கலாம்,’ என தெரிவித்தார்.
