தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற 23ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, முதல் முறையாக தேர்தல் களம் காணும் நடிகர் விஜய் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் குறிஞ்சிப்பாடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம், விசிக தலைவர் தொல் திருமாவளவனுடன் தனது வேட்புமனுவை குறிஞ்சிப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமியிடம் தாக்கல் செய்தார். மாவட்ட பொருளாளர் எம்.ஆர்.கே.பி கதிரவன், குறிஞ்சிப்பாடி திமுக ஒன்றிய செயலாளர் சிவக்குமார், மதிமுக மாவட்டச் செயலாளர் ராமலிங்கம், குறிஞ்சிப்பாடி திமுக பேரூர் செயலாளர் ஜெய்சங்கர், விசிக மாவட்டச் செயலாளர் திருமேனி, வழக்கறிஞர் மாநிலச் செயலாளர் அன்பரசன் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறியதாவது, “இந்த தேர்தலில் எங்களுடைய சாதனையும், கூட்டணியும் எங்களுக்கு மிகப்பெரிய பலம். மேலும் எங்கள் தேர்தல் அறிக்கை எங்களுக்கு பலத்தை அளிக்கிறது. இதனால் நாங்கள் வெற்றி பெறுவோம். கடந்த 2017 ம் ஆண்டு முதல் எங்கள் கூட்டணி, அதே கூட்டணி இன்னும் தொடர்கிறது. சில புதிய கட்சிகளும் எங்கள் கூட்டணிக்கு வந்துள்ளது. இது மேலும் எங்களுக்கு பலத்தை சேர்க்கிறது. சீசனுக்காக கூடும் கூட்டணி நாங்கள் அல்ல கொள்கைக்காக கூடிய கூட்டணி ஆகும். அடுத்த தேர்தலில் இந்த வட்டாட்சியர் அலுவலகம் மாற்றப்பட்டு புதிய இடத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே வட்டாட்சியர் அலுவலகம் கட்டப்பட்டு அங்கு தான் வேட்பு மனு தாக்கல் செய்வேன்” என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “விவசாயிகள் அனைவரும் மகிழ்ச்சியில் இருப்பதற்கான அடையாளமாக பச்சை துண்டை அணிந்து வந்தேன். விவசாயிகளுக்கு தமிழகத்தில் மட்டுமே தனி பட்ஜெட் போடப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனது தந்தையார் பயன்படுத்திய அம்பாசிடர் காரில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். சிலர் புதுசு கிடைச்சா பழசை விட்டுடுவாங்க. நான் அப்படி இல்லை. அந்த அடிப்படையில் தான் எனது தந்தை பயன்படுத்திய காரை நான் பயன்படுத்தி உள்ளேன். இதுபோல தான் எங்கள் கூட்டணியும் நீடித்து வருகிறது. ஆளும் கட்சியாக இருக்கும் போது நாங்கள் ஒன்றாக தான் இருக்கிறோம் .எதிர்க்கட்சியாக இருக்கும் போது ஒன்றாகத்தான் இருக்கிறோம்” என்று கூறினார்.
பின்னர் விசிக தலைவர் திருமாவளவன் கூறியதாவது, “திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு வெல்லட்டும் என்ற முழக்கத்தோடு தேர்தலை சந்தித்து வருகிறார். திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்றிக்கு பலம். கூட்டணி முதன்மையானது போன்று தேர்தல் அறிக்கை வலுவாக உள்ளது. தமிழ்நாடு பலத்துறைகள் வளர்ச்சி அடைந்துள்ளன. காட்டுமன்னார்கோயில் நான் போட்டியிடாததற்கு திமுகவின் அழுத்தம் தான் காரணம் எனக் குழப்பத்தை அதிமுக ஏற்படுத்தி வருகின்றனர்” என்று கூறினார்
