'சீட் கேட்கவும் இல்லை; விருப்பமும் இல்லை': பா.ம.க., வேட்பாளர் பேச்சால் எரிச்சல்

அம்பத்துார்: அம்பத்துார் தொகுதி பா.ம.க., வேட்பாளர் சேகர் அறிமுக கூட்டம், கொரட்டூரில் நேற்று நடந்தது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அ.தி.மு.க., – பா.ஜ., – த.மா.கா., – அ.ம.மு.க., உட்பட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில், அ.தி.மு.க., மாவட்டச்செயலர் அலெக்சாண்டர் பேசுகையில், ”அம்பத்துார் தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். ஆனால், கூட்டணி கட்சியை சேர்ந்த சேகருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைத்து விட்டது. அதில் எனக்கு வருத்தம் தான்.

”வேட்பாளர் என்ற முறையில், அவர் என்னை தொடர்பு கொண்டு பேச செல்போன் வாயிலாக அழைத்தார். எனக்கு அவருடன் பேச விருப்பமில்லை. அதனால், அழைப்பை ஏற்காமல் இருந்தேன். தொடர்ந்து அழைத்ததால், வேறு வழியின்றி இங்கு வந்தேன்,” என்றார்.

பின், வேட்பாளர் சேகர் பேசினார். அப்போது, ”நான் யாருக்கும் போட்டியில்லை. முதலில் நான் போட்டியிடவே விரும்பவில்லை. அதற்காக யாரிமும் சென்று வாய்ப்பு கேட்கவும் இல்லை. தொகுதியை அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,விற்கு விட்டுக் கொடுத்ததும், எங்கள் தலைவர் அன்புமணி, தொகுதியில் நீ தான் போட்டியிட வேண்டும் என கூறினார். அதை ஏற்று போட்டியிடுகிறேன்.

”மற்றபடி, யாரும் என் மீது வருத்தம் கொள்ளத் தேவையில்லை. மீறி வருத்தம் என்றால், அதை அன்புமணியை சந்தித்துத்தான் அலெக்சாண்டர் சொல்ல வேண்டும். அவர் தான், இது குறித்து பதில் சொல்ல வேண்டும்,” என்றார்.

இதையடுத்து, கூட்டத்துக்கு வந்திருந்த கட்சியினர் முகச் சுளிப்போடு திரும்பிச் சென்றனர்.

Source link