சீனாவுக்கு நெருக்கடி கொடுக்க பயணத்தை ஒத்தி வைத்தார் டிரம்ப்

பீஜிங்: சீனாவுடன் வர்த்தகப் பேச்சு துவங்கியுள்ள நிலையில், ஈரான் போர் விவகாரத்தில் நெருக்கடி கொடுக்கும் வகையில், சீனாவுக்கான பயணத்தை ஒத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

நம் அண்டை நாடான சீனா மற்றும் அமெரிக்கா இடையேயான வர்த்தகப் பேச்சு, நேற்று முன்தினம், ஐரோப்பிய நாடான பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்தது.

இதில், அமெரிக்க நிதி அமைச்சர் ஸ்காட் பெசன்ட் மற்றும் சீன துணை பிரதமரான ஹெ லிபெங் தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.

இந்த வர்த்தகப் பேச்சில் எட்டப்படும் முடிவுகள், வரும் 31 முதல் ஏப்ரல் 2ம் தேதி வரை பீஜிங்கில் நடைபெற உள்ள அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஷீ ஜின்பிங் இடையேயான சந்திப்பில் முக்கிய இடம் வகிக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், ஈரான் போரால் தற்போது அதிகரித்துள்ள எண்ணெய் விலையை குறைக்கவும், ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க உதவவும், சீனாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலும், தன் சீன பயணத்தை ஒத்தி வைக்க டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

இதுகுறித்து, டிரம்ப் நேற்று கூறியுள்ளதாவது:

மேற்காசிய நாடுகளில் இருந்து வரும் கச்சா எண்ணெயை சீனா சார்ந்திருப்பதால், தற்போது ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவி வரும் எண்ணெய் கப்பல் போக்குவரத்து தடையை நீக்க, சீனா உதவ வேண்டும்.

ஈரானின் அச்சுறுத்தல்களால் உலகளாவிய எண்ணெய் வினியோகம் தடைபட்டுள்ள நிலையில், இதற்கு சீனா உதவுமா என்பதை அந்நாட்டுக்கான என் பயணத்துக்கு முன் நாங்கள் அறிய விரும்புகிறோம். சீனா தன் முடிவை அறிவிக்கும் வரை, என் பயணத்தை தள்ளிப் போட வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link