புதுடில்லி : இந்தியாவில் நாளை முதல், இணையதள இணைப்புடன் செயல்படும் சீன ‘சிசிடிவி’, கேமராக்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வெளியிட்டுள்ள, கண்காணிப்பு கருவிகளுக்கான புதிய விதிகளின் படி, நாட்டின் பாதுகாப்பு, கண்காணிப்பு உள்ளிட்ட முக்கிய காரணங்களுக்காக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பு கருவிகளுக்கான புதிய சான்றிதழ் வழங்கும் நடைமுறை நாளை முதல் அமலுக்கு வரவுள்ளதால், அப்போது முதல் சீனாவின் ஹிக்விஷன், டாஹுவா உள்ளிட்ட நிறுவனங்களின் இணையதள இணைப்புடன் செயல்படக்கூடிய சிசிடிவி கேமரா விற்பனைக்கு தடை விதிக்கப்படவுள்ளது.
தற்போது அதிகம் பயன்பாட்டில் உள்ள இந்த சீன ‘ சிசிடிவி’ கேமராக்கள் வழியாக தரவுகள் கசியவும் சட்டவிரோதமாக வெளிநாட்டில் இருந்து கண்காணிக்கவும் வாய்ப்பு இருப்பதால், பாதுகாப்பு கருதி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இறக்குமதி செய்யப்படும் ‘ சிசிடிவி’ கேமராக்களில், அதன் முக்கிய அங்கமான ‘சிப் செட்’ எந்த நாட்டை சேர்ந்தது என்பதை நிறுவனங்கள் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
சீன சிப் செட்களை கொண்ட ‘ சிசிடிவி’ கேமராக்களுக்கு, இனி அரசின் தரச்சான்றிதழ் வழங்கப்படாது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் 70,000 கோடி ரூபாய் மதிப்பிலான சி.சி.டி.வி., கேமரா சந்தையில், இந்திய தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊக்கம் கிடைக்கும். உள்நாட்டு ‘ சிசிடிவி’ கேமராக்களுக்கு சந்தையில் மிகப் பெரிய வாய்ப்பு ஏற்படும்.
*சீன சிப் செட்களை கொண்ட ‘ சிசிடிவி’ கேமராக்களுக்கு, இனி அரசின் தரச்சான்றிதழ் வழங்கப்படாது
* ரூ.70,000 கோடி மதிப்பிலான ‘ சிசிடிவி’ கேமரா சந்தையில், இந்திய தயாரிப்பு நிறுவனங்களுக்கு ஊக்கம்
